Friday, September 28, 2018

இராமாயணச் சாவடி இடையர்கள் (பகுதி - 4)




கி.பி. 1656ல் 70 வயதாகி இருந்த திருமலை மன்னரை
மைசூர் மன்னன் கட்டளைப்படி, மதுரை நாட்டிற்கு 'கம்பையா' என்ற மிகக் கொடியவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று படையெடுத்து வந்தான். மதுரை நகருக்குள் புகுந்து ஆண், பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனுப்பி வைத்தான். அதோடு நிறுத்தாமல் கொள்ளையும் அடித்தான். சிக்கியவர்களை வெட்டிக் கொலைகளும் செய்தான். இதை அறிந்த திருமலை மன்னர், தன்னரசு நாட்டுத் தலைவர் திருமலை பின்னத்தேவருக்கும், இராமநாதபுரம் சேதுபதிக்கும் தன் பட்டத்து ராணி  மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைக் கண்டவுடன் தாமதியாமல் தன் படைகளுடன் வந்து மதுரை படைகளையும் ஒன்று சேர்த்து, கடும் போர் செய்த மைசூர் படைக்கு பெரிய சேதத்தை உண்டாக்கி விரட்டியடித்து விட்டு மதுரையைக் காத்தார்கள்.

அதே நேரத்தில் தன்னரசு படைகள், கன்னிவாடி, விருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். 'திருமலை பின்னத்தேவர்' தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது மைசூர் அரச தளபதி கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையம் ஆறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். மைசூர் மக்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் தொல்லை கொடுக்காமல் தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை மன்னர், தன்னரசு நாட்டுத் தலைவர் எட்டு நாட்டுக் கள்ளர் திருமலை பின்னத்தேவருக்கு 'மூக்குப்பறி' மற்றும் 'பெத்தபிள்ளை' என்ற பட்டம் வழங்கினார்.  சேதுபதிக்கு 'திருமலை சேதுபதி'என்ற பட்டமும் 'ராணி சொல் காத்தான்' என்ற பெயரும் வழங்கினார்.

சரி! யாரிந்த திருமலை பின்னத்தேவன் என்பதை அறிவோம்!


மதுரை நகர் நிரந்தரமான பாதுகாப்பிலிருக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு மதுரைக்கோட்டையை அகழிகளுடன் திருமலை மன்னர் பலப்படுத்தினார். அதற்கென எடுத்த விழாவில்  எனக்கோ அல்லது நகரத்திற்கோ எவராலும் முக்கியமாக பிரமலைக்கள்ளர்களாலும் அச்சம் விளைவிக்க முடியாது என்றும் கள்ளர்கள் அடங்கிவிட்டார்கள் என்றும் திருமலை நாயக்க மன்னர் பேசினார். இதையறிந்த திருப்பரங்குன்றத்துத் திசைக்காவலனாகவும், மற்றும் ஸ்ரீகந்தர் ஸ்வாமி தேவஸ்தானத்துக்குப் பரம்பரை பாதுகாவலனாகவும் இருந்து வந்த காரிபின்னைத்தேவனுக்கு அரசவிழாவில் மன்னர் கள்ளர்களை அடக்கிவிட்டேன் என்ற பிரசங்க சேதியை அறிந்து, 'மன்னரின் அடக்குமுறைக்குப் பயந்தோமில்லை. அகழியும் கோட்டையும் மதிலும் ஒரு பெரிய தடுப்பாக மாட்டாது. மக்கள் மனது வைத்து மன்னன்  பாதுகாக்கப் படவேண்டும்' என்று சூளுரை செய்து மன்னருக்குப் புத்தி புகட்டத் திட்டமிட்டு வெற்றி கண்டார்.

[குறிப்பு:-திருமலை நாயக்கரால் திருப்பரங்குன்றம் கோயிலின் அறங்காவலர் உரிமை 'காரி பின்னத்தேவன்' என்பவருக்கு 'திருமலைக்காரி பின்னத்தேவன் என பட்டம்கட்டி அவருக்கே உரிமையும் செப்புப்பட்டயமும் தரப்பட்டுள்ளது. (காரி பின்னத்தேவன் மலையமான் திருமுடிக்காரியின் மரபினரே. இவர்களுக்கு மழவராயர் என்று பட்டம் இருந்துள்ளது.
திருப்பரங்குன்றம் கோயிலில் பாண்டியனால் நியமிக்கப்பட்ட 'மழவராயர்' என்ற வம்சத்தினரே பிரமலைக்கள்ளர்.
திருப்பரங்குன்றத்தில் 13-ஆம் நூற்றாண்டு சுந்தரப்பாண்டியத்தேவன் கல்வெட்டுகளில் ஒருபாடிக்காப்போன் மழவராயர் என்பவரைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த (பாடிக்காப்போனாக ) திசைக்காவல் 'மழவராயர்' பிரமலைக் கள்ளரே.]

 கள்ளர்களின் உபாயங்களைக் கொண்டு திருமலைமன்னரின் சயனக்ருஹத்திற்குள் 'கன்னவாசல்' செய்து உள்ளே நுழைந்து மன்னரின் ராஜசின்னங்களைத் திருடிச் சென்றனர். காலையில் இதையறிந்த திருமலை மன்னர் திருட்டுச்சொத்தை எடுத்தவர்கள் நேரில் கொண்டு வந்து ஒப்புவித்தால் செய்த தவறை மன்னித்து செயல்வகைத்திறத்திற்குப் பரிசாகச் சன்மானங்களும் உயர்தர உத்தியோகமும் வழங்கப்படும், தாமே கண்டுபிடித்தால் குற்றவாளியாக பாவித்து தண்டனை விதிக்கப்படும் என்றும் முரசு கொட்டி ஊர்முழுக்க பிரகடனம் செய்யப்பட்டது. அதிகாலை எட்டுநாட்டுக் கள்ளர் தலைவரும்,தம் உறவினருமான ஊராண்ட உரப்பனூர் பின்னைத்தேவரிடம், திருப்பரங்குன்றம் காரி பின்னைத்தேவர் தனது தந்திரிகளுடன் திருமலை மன்னரின் அரண்மனையில் திருடிய சொத்துக்களை ஒப்படைத்தனர்.
உடனே உரப்பனூர் பின்னைத்தேவர் ராஜசின்னங்களையும்,அதைத்திருடியவர்களையும்
திருமலைமன்னரிடம் ஒப்படைத்து அவரைச் சமாதானம் செய்து, திருடிய தந்திரிகளுக்கு  போர்ப்படையில் பல பிரிவுகளில் நல்லதொரு பதவிகளை வாங்கித் தந்தார். உரப்பனூர் பின்னைத்தேவரின் உள்ளன்போடு அரசுக்கு நன்றி காட்டிய  இச்செயலை மிகவும் பாராட்டி, அவருக்கு  அரசியல் அரங்கில்  உயர்ந்த பட்டமும்,பதவியும் வழங்கினார். திருமலை மன்னருக்கு  'திருமலை பின்னத்தேவர்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. மேலும் பிறமலை நாட்டின் சுயாதீனத் தலைவராக நியமனமும் ஆனார்.
(ஆதாரம்:-  மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு
முதற்பதிப்பு 1976
இரண்டாம் பதிப்பு 1982
ஆசிரியர்:- பி.முத்துத்தேவர்
பக்: 210 to 220)

பிரமலைக்கள்ளர் என்போர் மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் வாழ்ந்து வரும் கள்ளர் இனக்குழுமத்தைச் சேர்ந்தோராவர்.
பிரான்மலைப் பகுதியில் வாழ்ந்து வந்த கள்ளர்களில் ஒரு சிலர் அவ்வகுப்பாரிடமிருந்து பிரிந்து வந்து மதுரைக்கு மேற்குப்பகுதிகளில் குடியமர்ந்தனர். அவர்கள் பிரான்மலைக்கள்ளர்கள் எனப்பட்டனர். அச்சொல்லே மருவி பிரமலை எனப்பட்டது என்ற ஒரு கருத்தும் உள்ளது.
[ஆதாரம்:- பிறமலைக்கள்ளர்கள் வாழ்வும்,லரலாறும் இரண்டாம்பதிப்பு 2012 ஆசிரியர்:- இரா.சுந்தரவந்தியத்தேவன்]

திருப்பரங்குன்ற மலை கிழக்கு எல்லையாகவும், ரத்தினகிரிமலை (கணவாய்மலை) மேற்கு எல்லையாகவும், குண்டாறு தெற்கு எல்லையாகவும் நாகமலை வடக்கு எல்லையாகவும் கொண்டு அமைந்துள்ள பகுதியே 'புறமலை அல்லது பிரமலை நாடு' என முத்துத்தேவர் குறிப்பிடுகிறார்.

இப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட கள்ளர்களே 'பிறமலைக்கள்ளர்' என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இப்பகுதியைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மதுரை நகரத்திலும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் பரவிவாழ்கின்றனர். இவர்களுடைய குலப்பட்டம் - "தேவர்".

பிறமலைப்பகுதி, எட்டுநாடுகளாகவும் இருபத்திநான்கு உபகிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பிரமலைப் பகுதி திடியன், வாலாந்தூர், புத்தூர், கருமாத்தூர்,பாப்பாப்பட்டி, கொக்குளம், வேப்பனூத்து, தும்மக்குண்டு என எட்டு நாடுகளாய் பிரிக்கப்பட்டுள்ளது.

திருமலை பின்னத்தேவர் எட்டுநாட்டின் முதல் தலைவராவார் (எட்டு நாடு 24 உபகிராமம், 64 பரப்பு நாடு, 128 சிதறல் நாடு), அவர் வாழ்ந்த 'ஊராண்ட உரப்பனூர்' கிராமம் எட்டுநாட்டின் தலைமை இடமாகக் கருதப்பட்டது.

உரப்பனூர், பிரமலைக்கள்ளர் நாட்டின் தலைமைக்கிராமமாகக் கருதப்படுகின்றது. ஓர் அப்பன் ஊர் என்ற சொல்லே உரப்பனூர் என்று மருவியது என்கின்றனர். இது கீழ்உரப்பனூர், மேல்உரப்பனூர், ஊராண்டஉரப்பனூர் என மூன்று கிராமங்களாக உள்ளது. இவை இன்றைய திருமங்கலம் ஒன்றியத்தில் அமைந்திருக்கின்றன.
(பொதுவாக 24 உபகிராமங்கள் என்று சொல்லப்பட்டாலும், எந்தெந்தக் கிராமங்கள் அதில் உள்ளடங்கும் என்பதில் வேறுபட்ட பட்டியல்கள் தரப்படுகின்றன. இதில் ஆரியப்பட்டி கோடாங்கி பெரிய பெருமாள்தேவர் ஒருபட்டியலையும், முத்துத்தேவர் ஒரு பட்டியலையும், டூமண்ட் ஒருபட்டியலையும் தருகின்றனர்.)


கி.பி 1655 இல் உரப்பனூரைச் சேர்ந்த திருமலை பின்னத்தேவன் என்பவரைப் இப்பகுதியின் தலைவராகப் பட்டங்கட்டி திருமலைநாயக்கர் ஒரு பட்டயத்தை வழங்குகின்றார். அப்பட்டயத்திலேயே நாடு எட்டு என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நாடு எட்டிற்கும் கம்பளிவிரித்து நீதிபரிபாலனம் செய்கின்ற அதிகாரம் திருமலை பின்னத்தேவருக்கு அளிக்கப்படுகின்றது.

நாயக்க அரசு, குமரி முனையிலிருந்து சத்தியமங்கலம் வரையிலான தமிழரின் நிலப்பரப்பை கைப்பற்றி ஆண்ட ஓர் அரசு, எழுபத்திரண்டு பாளையங்களை உருவாக்கி வரி வசூல் செய்து ஆட்சி நடத்திய ஓர் அரசு, தன் அரண்மனைக்கு சில மைல் தொலைவில் இருந்த கள்ளர் நாட்டிலிருந்து எந்த வரியும் வசூல் செய்ய முடியவில்லை.
கிபி 1654 ல் கள்ளர்களை ஒடுக்க பல முயற்சி செய்த திருமலை மன்னர், கள்ளர் நாடுகளை அடக்கி ஒரு பாளையம் அமைக்கமுடியால் திணறியபோது ஒரு சமரசத்திட்டத்திற்கு வந்தான். எட்டு நாட்டிலும் கம்பளி விரித்து அதிகாரம் பண்ன உரிமை கொடுத்து உரப்பனூர் பின்னத்தேவருக்கு பட்டம் கட்டி, மேலும் பின்னத்தேவன், சுந்ததேவனை அழைத்து பல பட்டங்கள் பல பரிசுகள் கொடுத்து கள்ளர் நாடுகளை நட்பு நாடுகளாக மாற்றிக்கொண்டான்.
(ஆதாரம்:-தருமத்துப்பட்டி செப்பேடு - கி.பி.1655)

  எட்டு நாட்டின் தலைவராகப் பட்டம் சூட்டப்பட்ட பின்னத்தேவருக்கு கம்பளி, பிடிசெம்பு, பிரம்பு, பாதகட்டை, காளாஞ்சி செம்பு போன்றவை அரசுசின்னங்களாக வழங்கப்பட்டன. அவர் நாட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பொழுதும் தனிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பஞ்சாயத்துக்களுக்குத் தலைமை தாங்கும் பொழுதும் அரசரால் கொடுக்கப்பட்ட அந்த இராச அரசுகம்பளத்தினை விரித்தே அதன்மீது அமர்வார். அரசர் கொடுத்த பாதக்கட்டையை அணிந்து கொண்டும், பொற்பிரம்பினைக் கையில் பிடித்துக் கொண்டும்தான், கூட்டங்களை நடத்துவார். இனி அவரின் அதிகாரங்கள் பற்றிக்காண்போம்.

  ஒருவரைச் சாதியிலிருந்து நீக்குவதற்கும், சேர்ப்பதற்கும் அதிகாரமுடையவராக இருந்தார். ஓர் ஆண் வேறு சமூகத்துப் பெண்ணையோ, பெண் வேறு சாதி ஆணையோ திருமணம் செய்து கொண்டால் அவர்களையும் திருமண உறவுகள் தடை செய்யப்பட்டுள்ள (அதாவது பங்காளி உறவுடையவர்களைத் திருமணம் செய்து கொள்பவர்களையும்) தனது அதிகாரத்திற்கும் தனக்குத் துணையாக இருக்கும் தேவர் அவை(சபை)யின் அதிகாரத்திற்கும் தனக்கும் மறுப்பவர்களையும் சாதி நீக்கம் செய்கின்ற அதிகாரம் திருமலை பின்னத்தேவருக்கு இருந்தது. அவ்வாறு “ஒருவரைச் சாதியிலிருந்து நீக்கிவிட்டேன். இவனோடு இனிச் சுத்தக் கள்ளன் யாரும் கொள்வினை, கொடுப்பினை வைத்துக் கொள்ளக்கூடாது” எனச் சொல்லி வலப்புறமும், இடப்புறமும் திரும்பி மூன்று முறை தனது எச்சிலைத் துப்பிவிடுவார். அன்றிலிருந்து அவர் சாதியிலிருந்து விலக்கப்பட்டவராக கருதப்படுவர். யாராவது மீறி அவர்களோடு திருமணம் உறவு வைத்துக்கொண்டால் அவர்களும் விலக்கப்பட்டவர்களாகக் கருதப்படுவர். அவர்கள் ஒதுக்கல் வகை எனப்பட்டனர். அவர்கள் தங்களுக்குள்ளேயே திருமண உறவுகளை வைத்துக்கொண்டனர். அதனால் இதற்குள்ளேயே அவர்கள் தனிக்குழுவாக உருவெடுத்தனர்.

  இவ்வாறு விலக்கி வைப்பதோடு விலக்கப்பட்ட ஒருவரை சாதியில் சேர்த்துக் கொள்கின்ற அதிகாரமும், பின்னத்தேவருக்கு இருந்தது. சாதிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தனது தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, தேவர் அவையைச் சேர்ந்தவர்களின் காலில் விழுந்து வணங்கி அதற்குரிய தண்டத்தொகையைத் தேவர் அவைக்குச் செலுத்தி விட்டால் அவரைச் சாதியில் மீளவும் சேர்த்துக் கொள்ள இயலும். அப்படிச் சேர்க்கும் பொழுது திருமலை பின்னத்தேவர் இன்று முதல் இவன் சாதிமகன் சுத்தக் கள்ளன் எனச் சொல்லித் தனது பிடி செம்பிலுள்ள தண்ணீரை எடுத்து அவரது தலையில் மூன்று முறை தெளித்துவிட்டால் அவர் அன்றிலிருந்து சாதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுவார். அவர் பின்பு சுத்தக் கள்ளர்களுடன் திருமண உறவுகளை வைத்துக் கொள்வர். அப்படிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வழக்கைத் தொடுக்கின்ற வாதிகள் அவருக்கு ஐந்து பணம் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். இச்சாதிக்குள் அவரது தீர்ப்பே இறுதியானதாக கருதப்பட்டது. அதன் மீது மேல்முறையீடு மதுரையிலுள்ள கோனார்கள் சாவடிக்கும், அதிலிருந்து மேல்முறையீடு கீழ்நாடு நரசிங்கம் பட்டியிலுள்ள சாவடிக்கும் எடுத்துச் செல்லப்படும். இறுதி மேல்முறையீடு இராமநாதபுரம் அரசர் சேதுபதியிடம் எடுத்துச் செல்லப்படும்.

திருமலை நாயக்கரிடம் “பெத்தபிள்ளை“ என்றும் “திருமலை“ என்றும் பட்டம் பெற்ற பெத்தபிள்ளை திருமலைப்புன்னைத் தேவன் என்பவனுக்குக் கம்பிளி அதிகாரம், பாதகுறடு, காளாஞ்சி முதலிய சிறப்புகள் செய்து அவனுக்குக் கம்பிளி போடுகிறபோது பாதகாணிக்கையாக 5 பணம், அரண்மனையிலிருந்து பணமுடிப்பு 60 பணம் ஆகியவை கிடைப்பதற்கும், அவனுக்குப் பெண் குழந்தை பிறந்த போது “திருமலைபுன்னியக்கா“ என்று பெயர் வைத்துத் தங்கப்பதக்கம் வழங்குவதற்கும் மேலும் 'உச்சப்பட்டி, தருமத்துப்பட்டி'ஆகிய இரண்டு கிராமங்கள் அவனுக்கு விட்டுக் கொடுத்ததற்கும்

| 'பதினெட்டுப் பட்டிக் கோனார்கள்' |

அவனுக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளுக்கும் ஆதாரமாக அளிக்கப்பட்ட செப்புப் பட்டயம் இது. இதில் சிவகங்கை மன்னர், புதுக்கோட்டை மன்னர் இருவரும் குறிப்பிடப்படுகின்றனர். மதுரையில் வடக்கு மாசி வீதியில் இன்றுள்ள இடையர்களுக்கான ஸ்ரீநவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் இன்னும் திருமலை பின்னைத்தேவன் வழியினருக்கு மரியாதைகள் இருப்பதாகத் தெரிகிறது.

• ஆதாரம்:- திருமலை மன்னரால் தரப்பட்ட
தருமத்துப்பட்டி செப்பேடு 2

• செய வருடம் பங்குனி மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை ( 19-03-1655)


• செப்பேட்டில் உள்ளவை:-

||"மதுராபுரிக்கி கற்த்தறாகிய திருமலை னாயக்கறவற்களுக்கு பெத்த பிள்ளை திருமலைப்புன்னைந்தேவனுக்கு எழுதிக் குடுத்த பட்டயம் செயளு பங்குனி ... சோமவாறத்தில் நாடு யெட்டு வணிகத்துக்கும் கம்பிளி அதிகாரமும் புடிசெம்பும் பட்டமும் முதமையும் பாதகொறடு காளாஞ்சியும் ஆகா யிவளவும் திருமலைப் புன்னைதேவனுக்கு பட்டங்கட்டி ஸ்ரீ யானுக்கு வருமானம் சாதியாற் நாட்டில் வந்தது கம்பிளி போடுகிறபோது பாதக்கணிக்கை 5 வச்சு கண்டு கொள்கிறரது ரெண்டாவது சுந்தத்தேவன் மூணாவது ஒச்சாத்தேவன் திருமலை புன்னைத்தேவனுக்கு அரமனையிலிருந்து 60 பண முடிப்பு குடுத்தனுப்புகிரது ஷியானுக்கு பெண் குளந்தை பிரந்ததக்கு திருமலைப் புன்னியக்காளென்று பேறும் வச்சு தங்கப்பதைக்கமும் போட்டு வீரமடையான் செய்க்கி கிளக்கு கணக்கு மானிபத்துக்கு வடக்கு நாலுசெயி நிலம் நஞ்சை மானிபம் பாக்கு வெத்திலை சிலவுக்கு உச்சப்பட்டி தற்மத்துப்பட்டி ஆக ரெண்டுகிராமம் விட்டுக் குடுத்தது பதினெட்டுப் பட்டிக் கோ னாக்கள் ஆடி தீவாளி சங்கழுந்திக்கி கும்புக்(கு) கிடாய் க னாக்கமாற்கள் பால்க்குடம் நெய்க்குடம் கொண்டு வந்து கண்டு கொள்ளவும் யிந்தப்படிக்கி ராசமானிய ஒப்பம் சாட்சி சிவசங்குராச தொண்டைமான், புதுக்கோட்டை சிவதத்தம்பி, கறுமாத்தூற் கொண்டிரியதேவன் தாம்பூர ப்பட்டயஞ் செய்தவன் ஆசாரி யிந்தப் பட்டயத்தை பின்னோர்கள் அடி அளிவு செய்தால் பிராமணாளைக் கொன்றதோசத்திலுங் காறாங்கோவைக் கொன்ற தோசத்திலு அடைந்து போவாறாகவும் வேணும் சொக்கலிங்கம் மீனம்மாள் துணை முணுசாமிதுணை.||

(குறிப்பு:- சித்தாலை எனும் கிராமத்தின் அருகே உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை குலக்கோயிலாக வணங்கும் ஊராண்ட உரப்பனூரை பூர்வீகமாகக்கொண்ட வடமலை சுந்தத்தேவர் கூட்டத்தாரின் உடன் பங்காளிகளும் பங்காளி முறை உள்ளவர்களும்

இராஜதானி ஊராண்ட உரப்பனூர் இது வடமலை சுந்தத்தேவரின் பூர்வீக ஊர்ராகும் இவரது வாரிசுகள்

1)ஊராண்டஉரப்பனூர்,
2)கரடிக்கல்,
3)மாவிலிபட்டி,
4)வடபழஞ்சி,
5)தென்பழஞ்சி,
6)வெள்ளைப்பாறைப்பட்டி,
7)நடுவக்கோட்டை,
8)மீனாட்சிபட்டி
போன்ற ஊர்களில் வாழ்கின்றனர் இவர்கள் சித்தாலையில் அமைந்துள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர் மேலும் வடமலை சுந்தத்தேவர் எனும் பட்டத்திற்குரியவர்கள் மேலே கண்ட ஊர்களில் வாழும் வடமலை சுந்தத்தேவர் வாரிசுகளுக்கு மட்டுமே மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள இடையர்களுக்கு(கோனார்) பாத்தியபட்ட ஸ்ரீநவநீதகிருஷணன் கோயில் பட்டம் கட்டப்படுகின்றனர்.) 




தெய்வேந்திர கோத்திரமாகிய திருமலை பின்னதேவனை சேர்ந்த ஆறு தாய் மகன்களும் திருமலை நாயக்கனை சந்திக்கும் போது கீழ்கண்டவற்றை அளித்துள்ளனர்.

 ஆட்டுக்கிடாய், 5 கலம் அரிசி,பருப்பு,பசும்பால்,சீனிசக்கரை,
 பாதகாணிக்கை பணம் 50 ஆகியவற்றுடன் சந்தித்து மன்னரை சந்தோஷப்படுத்தினார்கள். அதனைக் கண்டு சந்தோஷமடைந்த மன்னர் என்ன வேண்டும் என்று கேட்க,

'18பட்டி கோங்கிமார்கள்'

(கோனார்கள்) தெருவில் வீட்டுமனைகள்  இருவருக்கும் விட்டுக் கொடுக்கவும் இராமாயணச்சாவடியில் கூடும் பொழுது கொம்புக்கிடாய்,குத்துக்கிடாய் கொடுக்க வேண்டுமென்றால் நிலங்களில் ஆட்டுக்கிடை கிடத்தப்போனால் வருமானத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென வேண்டினர். அதன்படி செய்ய திருமலை மன்னர் உத்தரவிட்டுத் தரப்பட்டதே தருமத்துப்பட்டி செப்பேடு ஆகும்.


|தருமத்துப்பட்டி செப்பேடு |

பார்த்திப வருடம் ஆனி மாதம் 19ம் தேதி
 (17-06-1645)

தமிழ்ச் சமூகத்தின் பூர்வீக வழிபாட்டுச் சமயமரபுகளான இயற்கை வழிபாடு. முன்னோர் வழிபாடு,  தாய்த் தெய்வ வழிபாடு, சண்டையில் இறந்து போன வீரர்களை வழிபடுகின்ற நடுகல் வழிபாடு போன்றவையே இன்றும் பீறலைக்கள்ளர்களின் அடிப்படை வழிப்பாட்டு மரபுகளாக உள்ளன. இவர்களது தெய்வங்கள் அனைத்தும் மேற்கூறிய நான்கு நிலைகளிலேயே அமைந்திருக்கின்றன. அவற்றைப் பல தெய்வ வடிவங்களில் வைத்து வழிபடுகின்றனர். அவை பின்வரும் நான்குவகைகளில் அமைந்துள்ளன.
1. குலதெய்வங்கள்,
2. காவல்தெய்வங்கள்
3. ஊர்ப்பொதுத்தெய்வங்கள் (அம்மன்)
4. நடுகல்தெய்வங்கள்
                ஒரே குல தெய்வங்களை வணங்குபவர்கள் ஒரே பங்காளிகளாகவும் கருதப்படுகின்றனர். இக்குல தெய்வங்களை வணங்குவதன்மூலம் தங்கள் குலம் பலகிப்பெருகுவதாக நம்புகின்றனர். பெரும்பாலும் முகம் தெரியாத முன்னோர்களும்,அவர்களால் நம்பப்பட்ட சக்திகளுமே குலதெய்வ வடிவங்களைப் பெறுகின்றன. அவ்வகையில் பிறமலைக்கள்ளர்கள் பலவகை ஆண் தெய்வங்களையும், பெண்  தெய்வங்களையும் தங்கள் குல தெய்வங்களாக வணங்குகின்றனர்.
                கழுவநாதன், பொன்னாங்கன், கடசாரிநல்லகுரும்பன், புன்னூர் அய்யனார், பூங்கொடி அய்யனார், ஊர்க்காளை அய்யனார்,கல்யாணக்கருப்பு, தென்கரைக்கருப்பு  (முத்தையா)  சோனைக்கருப்பு, பெத்தனசாமி, ஆதிசிவன், பெருமாள், மலைராமன்,கோட்டைக்கருப்பு, வாலகுருநாதன், குருநாதன், மாயன், வீரபுத்திரசாமி, பதினெட்டாம்படிக் கருப்பு போன்ற ஆன் தெய்வங்களையும் பேச்சியம்மன், ஓச்சாண்டம்மன், சுந்தரவள்ளியம்மன், காத்தாண்டம்மன் (காத்தாண்டீஸ்வரி), அங்காளம்மன் (அங்காளஈஸ்வரி),சின்னக்காஅம்மன், காமாட்சியம்மன், கண்ணாத்தாள், ஒய்யாண்டாள், நல்லதங்காள் போன்ற பெண்தெய்வங்களையும் குல தெய்வங்களாக வணங்குகின்றனர்.
                ஒவ்வொரு குலதெய்வக் கோயிலும் ஒரு குறிப்பிட்ட வம்சாவளிக்குப் பாத்தியப்பட்டதாக உள்ளது. பெரும்பாலும் ஒரே ஆணின் மரபில் வந்த வம்சத்தவர்கள் அதனைக்குல தெய்வமாக வணங்குகின்றனர். சில குலதெய்வக்கோயில்களை ஒருவரின் ஆண்வாரிசுகளும், பெண்வாரிசுகளும் இணைந்தும் வணங்குகின்றனர்.  ஒவ்வொரு குல தெய்வக்கோயிலிலும் 21 பரிவார தெய்வங்களும் சிலகோயில்களில் 42 பரிவாரத் தெய்வங்களும் உள்ளன. ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரில் கோயில் அமைந்திருந்தாலும், எல்லாக் கோயிலின் கருவறையிலும் அய்யன் சாமியே இடம் பெற்றுள்ளது. அய்யன் சாமியே எல்லாத் தெய்வங்களுக்கும் மூலத்தெய்வமாகக் கருதப்படுகின்றது. அந்த அய்யன்சாமியின் வலது, இடதுபக்கங்களில் மற்றபரிவாரத் தெய்வங்கள் எல்லாம் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. [ஆதாரம்:- பிறமலைக்கள்ளர்கள் வாழ்வும்,லரலாறும் இரண்டாம்பதிப்பு 2012 ஆசிரியர்:- இரா.சுந்தரவந்தியத்தேவன்]

இதில் மதுரைக்கு வந்தேறிய திருநெல்வேலி புதுநாட்டு இடையர்கள் முதலில் எட்டு நாட்டுக் கள்ளர் தலைவன்
 பின்னைதேவரின் ஆட்சிப்பரப்பில் தங்கி, திருமலை மன்னர் அனுமதி உத்தரவு பெற்ற பின்னரே மதுரை நகருக்குள் வடக்குப்பகுதிக்குள் குடியேறினர்.

( குறிப்பு:- பிறமலைப்பகுதி, எட்டுநாடுகளாகவும் இருபத்திநான்கு உபகிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பிறமலைப் பகுதி திடியன், வாலாந்தூர், புத்தூர், கருமாத்தூர்,பாப்பாப்பட்டி, கொக்குளம், வேப்பனூத்து, தும்மக்குண்டு என எட்டு நாடுகளாய் பிரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக 24 உபகிராமங்கள் என்று சொல்லப்பட்டாலும், எந்தெந்தக் கிராமங்கள் அதில் உள்ளடங்கும் என்பதில் வேறுபட்ட பட்டியல்கள் தரப்படுகின்றன. இதில் ஆரியப்பட்டி கோடாங்கி பெரிய பெருமாள்தேவர் ஒருபட்டியலையும், முத்துத்தேவர் ஒரு பட்டியலையும், டூமண்ட் ஒருபட்டியலையும் தருகின்றனர்.)

எட்டு நாட்டின் 24 உபகிராமங்களில் ஒன்றான விளாச்சேரி கிராமத்தின் மொட்டமலை பகுதியில் திருநெல்வேலி வல்லநாடு புதுநாட்டு இடையர்கள் பிடிமண்ணாக கொண்டு வந்த சாஸ்தா மற்றும் 21 பரிவார தேவதைகளை பிரதிஷ்டை செய்து விட்டனர். சிலர் விளாச்சேரியிலேயே தங்கியும் விட்டனர். சமீப காலம் வரை மொட்டமலை மங்கை காத்த சாஸ்தா கோயில் களரி விழா மற்றும் மற்றைய விழாக்களுக்கு பிறமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 'கொண்டைக் கோடாங்கி'
ஒருவரே வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிறமலைக்கள்ளர் தெய்வங்கள் ஒச்சாண்டம்மன்,நல்லதங்கை முதலிய பல சிறு தெய்வங்களை இந்த புது நாட்டிடையர்கள் தங்கள் குலதெய்வத்தோடு வழிபடத் தொடங்கினர். இடையர் நடுத்தெருவிலுள்ள நல்லமாடன் கோவிலில் பிறமலைக்கள்ளருக்கே உரித்தான ஒச்சாண்டம்மன் வழிபடுவது பற்றி 15.08.2012 ல் நண்பர் ஜகந்நாத பராங்குசர்  உதவியோடு கள ஆய்வு செய்த போது தெ.நவநீதகிருஷ்ணக்கோனார் அவர்கள் கூறினார்.
இராமாயணச்சாவடி இடையர்களில் உறியடி திருவிழா நடத்தும் பங்காளிகள் வகையறாக்களின் கோயில் நல்லதங்காள் (அ) நல்லதங்கை கோயில் என்று அழைக்கப்படுகிறது. பிறமலைக்கள்ளர்களின் சிறுதெய்வங்களில் ஒன்றாக நல்லதங்காள் வழிபடப்பட்டவள் ஆவாள். (நெல்லை வள்ளியூர் அருகே) சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் சாஸ்தாவை குலதெய்வமாகக் கொண்ட இந்த உறியடி இடையர்கள் இராமாயணச்சாவடி மேற்கு மதிலருகேயே நல்லதங்காள் கோயிலை
கட்டியுள்ளனர்.

.....தொடர்ச்சி அடுத்த பதிவு - Post ல பார்ப்போம்

                  அன்புடன்

        ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்




Tuesday, September 25, 2018

இராமாயணச் சாவடி இடையர்கள் ( பகுதி -3)


ஸ்ரீராஜராஜேஸ்வரி உபாசகரான
 திருமலைமன்னர் கடம்ப வனமாகிய மதுரையை ஸ்ரீசக்கரவடிவில் அமைத்து புதுப்பொலிவூட்டிக் கொண்டிருக்கும் காலத்தில் திருநெல்வேலி வட்டாரமானது பாளையக்காரர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த 'புதுநாட்டு இடையர்கள்' ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கையினர்களாக வாழ்ந்து வந்தனர். 'சிறுதாலி' கட்டும் இப்பிரிவினருள் ஒரு பெண்ணானவள் தன் கணவனை இழந்து விதவையாகி விட்டால் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கமில்லை. இந்நிலையில் அங்குள்ள பாளையக்காரர் இடையர்களை அழைத்துக் கணவனை இழந்த பெண்கள் வாழ்நாள் முழுவதும் விதவையாய் இருப்பது நல்லதில்லை. அவர்கள் மற்றவர்களைப் போல. மறுமணம் செய்து கொள்ளலாம் என்று வற்புறுத்துகிறார்.
'நாங்கள் அறுத்தால் கட்டமாட்டோம்' என்று சொல்லிப் பாளையக்காரர் அறிவுரையினை சிறுதாலி கட்டும் புதுநாட்டு இடையர்கள் ஏற்க மறுத்தனர்.


அங்கு வாழ்ந்த புதுநாட்டு இடையர்கள் பாளையக்காரர்களுக்குச் சொந்தமான நிலங்களில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தனர். அவ்வாண்டு வழக்கம் போல இடையர்கள் நெற்பயிர்களை அறுவடை செய்தனர். அறுவடை முடிந்ததும் இடையர்கள் நெற்பயிர்களைக் கட்டத்தொடங்கினர். அப்பொழுது பாளையக்காரர் 'அறுத்த பயிர்களை இடையர்கள் கட்டக்கூடாது' என்று ஆணை பிறப்பித்து விட்டார். காரணம் கேட்ட இடையர்க்கு "நீங்கள் தான் அறுத்தால் கட்டமாட்டோம் என்று சொன்னீர்களே! அதன்படியே நீங்கள் இப்பொழுது நெற்பயிர்களைக் கட்டவேண்டாம்" என்று பாளையக்காரர் விளக்கம் கூறினார். இடையர்கள் நெற்கதிர்களை அப்படியே போட்டு விட்டுத் திரும்பி விட்டனர். அவர்களுக்குக் குலவழக்கமே பெரியதாகத் தோன்றியது. பாளையத்தை லிட்டுச் செல்ல முனைந்தனர். அதன்படி பதினெட்டு பட்டிகளில் உள்ள இடையர்கள் எல்லோருக்கும் செய்திகள் அனுப்பப் பட்டன. எல்லா இடையர்களும் ஓரிடத்தில் கூடி முடிவெடுத்தனர். அம்முடிவின்படி ஒருநாள் இரவோடு இரவாகத் தாங்கள் காலங்காலமாக வணங்கி வந்த குலதெய்வங்களை பிடிமண்ணாகவும், கால்நடைகளையும் ஓட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக வடக்கே தமிழ் வளர்த்த மதுரையை நோக்கி வந்தனர். மதுரை திருமங்கலம் அருகே ஊராண்ட உரப்பனூர் எட்டு நாட்டுக் கள்ளர் தலைவர் திருமலை பின்னத்தேவர்  தெற்கேயிருந்து புலம் பெயர்ந்து வந்த இந்த இடைக்கூட்டத்தினரிடம் நடந்த கதையைக்  கேட்டறிந்து திருமலை மன்னரிடம் அழைத்துச்சென்றார். திருமலை மன்னரும் அந்த புதுநாட்டு இடையர்களுக்கு மதுரை நகரின் வடக்குப்பகுதியில் குடியேற இடமளித்தார்.
மேற்குறித்த இடையர்கள்  புலம்பெயர்ந்த கதையை ஆங்கிலேயரான(Edgar Thurston)
எட்கர் தர்ஸ்டன் உருவாக்கிய (The Caste and Tribes at Southern India) 'தென்னிந்திய குலங்களும் குடிகளும்'  எனும் நூலில் காணப்படும் குறிப்பு அதை  உறுதி செய்கிறது.

  கி.பி.1906ம் வெளியிடப்பட்ட ஆங்கில நூலான மதுரை ஜில்லா கெஜட்டியர் ( Madura district gazeteer) எனும் நூலில் வில்லியம் பிரான்சிஸ் 96ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதையே எட்கர் தர்ஸ்டனும் வழிமொழிகிறார். [ The podunattu Idaiyans have a tradition that they originally belonged to Tinnevelly, but fled to this district secretly one night in a body in the time of Tirumalai Nayakkan because the local cheif oppressed them. Tirumala welcomed them and put them under the care of the kallan headman pinnai devan already mentioned, decreeing that, to ensure that this gentleman and his successors faithfully observed the charge, they should be always appointed by an Idaiyan. That condition is observed to this day. 

 *_Reference from :-
 Castes and Tribes of Southern India
Auther: Edgar Thurston
 Part: II.
Page:356 _*]

கி.பி.1981ம் ஆண்டில் மதுரை 'யாதவர் கல்லூரி' பேராசிரியர் திரு.கா.இராமானுசம் அவர்களின் 'மதுரை வட்ட யாதவர்களின் குலச்சடங்குகள்' எனும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நூலிலும் மேற்கண்ட புலம் பெயர்ந்த கதையே கூறப்படுகிறது. இதற்கான வாய்மொழித் தகவலாக  மதுரை வடக்கு மாசி வீதி திரு. வே.நா.திருமால் சோலைமணி,மற்றும் அச்சம்பட்டியில் குடியிருக்கும் திரு.மாடசாமிக்கோனார், ஊமச்சிகுளம் திரு.மாறநாட்டுக் கோனார் போன்ற புதுநாட்டு இடையர் சான்றோர்களிடம் வாய்வழித் தரவுகளை சேகரித்துள்ளார்.

[இதில் வே.நா. திருமால் சோலை மணிக்கோனார் தாத்தா அவர்களிடம் 02.08.2012ல்  எனது நீண்ட கால வைணவ நண்பரான திருக்கூடல். செ.ஜகந்நாத பராங்குச தாஸருடன் சென்று நேரடியாக பேட்டி கண்ட போது மேற்க் கண்ட புதுநாட்டு இடையர்கள் புலம் பெயர்ந்த கதையை உறுதி செய்தார். பரம்பரை பரம்பரையாக
காடிக்கஞ்சி எனும் புளிச்சதண்ணி தரும் வைத்திய பின்ணணியும், மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணனின் மலரடி தொழுதேத்தும் வைணவ பின்ணணியும் கொண்ட திருமால் சோலைமணி அவர்களின் இனிய நண்பர் வைணவச் சொற்பொழிவாளர், கலையிலங்கு மொழியாளர், மதுரைப்பேராசிரியர் முனைவர். இரா.அரங்கராஜன் ஸ்வாமிகளின் ஆன்மிக வாரிசே பராங்குச தாஸராகிய எனது நண்பர் ஆவார்.]

பி.முத்துத்தேவர் என்பவர் எழுதிய 'மூவேந்தர் குலத்தேவர் சமூக வரலாறு' எனும் நூலில் பக்கம் 215ல் மேற்குறித்த கதையே வழிமொழியப்படுகின்றன.
'திருநெல்வேலி வட்டாரத்தில் வாழ்ந்த புதுநாட்டு இடையர்களுக்கு அங்கிருந்த ஒரு பாளையக்காரன் தொந்தரவு சகிக்க முடியாமலிருந்தபடியால் அந்த புதுநாட்டு இடையர்கள் ஒன்று சேர்ந்து மதுரைக்கு வந்து திருமலை நாயக்க மன்னரிடம் தஞ்சம் புகுந்தார்கள். திருமலை நாயக்கரும் எட்டு நாட்டு கள்ளர் தலைவன் திருமலை பின்னதேவரை புதுநாட்டு இடையர்கள் காப்பாளனாக நியமித்து அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பரிபாலித்து வரும்படியாகச் செய்தார்' என்று பி.முத்துத்தேவர் மேற்கண்ட தகவலை உறுதி செய்கிறார்.

இம்மாதிரியாகத் தங்களைப் பரிபாலித்து வரும்படியாக மன்னனால் நியமிக்கப்பட்ட திருமலைப்பின்னத் தேவர் காலமாகிவிட்டால் அவர் ஸ்தானத்திற்கு வாரிசாக வரும் அடுத்த பட்டக்காரருக்கு முடி சூட்ட வேண்டிய பொறுப்பு இடையர்களுடையது.

மதுரையில் இராமாயணச்சாவடியிலிருந்து வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் வரையிலும் உள்ள இடத்தில் புது நாட்டு இடையர்களுக்கு வீட்டுவசதி செய்து கொடுக்கத் தேவர் வசம் ஒப்புவிக்கப்பட்டு அதன்படி வீடுகள் அமைக்கப்பட்டன. திருநெல்வேலி போன்றே மதுரைக்கு வடக்கிலும் வடமேற்கில் உள்ள 18 பட்டி ஊர்களில் இவர்கள் கன்று காலி ஆடுமாடு மேய்த்துக்குடி வாழ்வதற்கு திருமலை நாயக்க மன்னரால் ஏற்பாடு செய்யப்பட்டது. ( 'பதினெட்டு பட்டி கோங்கிமார்கள்' என்று தருமத்துப்பட்டி செப்பேடும் கூறுகிறது.)  

இராமாயணச்சாவடி புதுநாட்டு இடையர் ஜாதியில் இறந்தவரின் சொத்து அவரின் மனைவிகளுக்குப் போகாது. இறந்தவரின் தாயாதிகளான பங்காளிகளுக்கு மட்டுமே போய்ச் சேரும். இந்த பழக்கம்தான் காலம் காலமாக (வடமதுரா விலிருந்து) இந்த புதுநாட்டார் ஜாதியில் இருந்து வருகிறது .
 இவர்கள் இங்குள்ள இந்துமத கோட்பாடுகளை முழுமையாகப் பின்பற்ற மாட்டார்களாம். அதிலும் குறிப்பாக, இவர்களின் திருமணம், தத்துகுழந்தை எடுப்பது, பாகப் பிரிவினை, சொத்துவாரிசுஉரிமை (marriages, adoption, partition, inheritance etc.) இவைகளில் இந்த “இந்துமத” கோட்பாடுகளை ஏற்க மாட்டார்களாம். இவர்களுக்கென்றே ஒரு தனி பழக்க வழக்கம் உண்டாம்.

திருமணத்தில் ஒரு புதிய வித்தியாசமான பழக்க வழக்கம் உண்டாம். அது, ஒரு பெண்ணை, அவளின் தாய்வழி மாமனின் மகனுக்கு கண்டிப்பாக திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டுமாம். அவன் சின்ன பையனாக இருந்தாலும், வயதில் பெரிய ஆளாக இருந்தாலும், அந்தப் பெண், அவனைக் கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டுமாம். அப்படி திருமணம் செய்து கொள்ள மறுத்து வேறு யாரையாவது திருமணம் செய்தால், அந்த திருமணத்துக்கு வருபவர்களில் ஆண் என்றால் அவர் ரூ.12-8-0 (12 ரூபாய் எட்டாணாவும்), பெண் என்றால் அவர் ரூ.6-4-0ம் அபராதமாகக் கட்டிவிட்டு செல்ல வேண்டுமாம். அந்த மொத்த அபராதப் பணமும் இந்த ஜாதி சொத்தாக எடுத்துக் கொள்ளப்படுமாம்.
இந்த யாதவ ஜாதியில் தத்து எடுக்கும் பழக்கமே இல்லையாம். இதில் ஒரு வித்தியாசமான பழக்கம் இந்த ஜாதியில் உள்ளதாம். சொத்தை பாகம் செய்யும் போது “பத்தினி பாகம்” (Patni-bhagam) என்ற முறையில் ஒரு பழக்கம் உள்ளதாம். பொதுவாக, மற்ற ஜாதிகளில், பிறந்த ஆண் பிள்ளைகளை வைத்து பங்கு பிரிப்பார்களாம். அதை “புத்திரபாகம்” (Putra-bhagam) என்று சொல்வார்களாம். அதன்படி எத்தனை பிள்ளைகளை இருக்கிறார்களோ அத்தனை பேரும் தலைக்கு ஒரு பங்கு எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால், இந்த யாதவ ஜாதி பழக்கத்தில், “பத்தினி பாகம்” என்ற முறைப்படி சொத்துக்கள் பங்கு பிரிக்கப்படுமாம். அதன்படி, ஒருவருக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்களோ, அந்த மனைவிகளின் எண்ணிக்கைப்படி தலைக்கு ஒரு பங்கு எடுத்துக் கொள்வார்களாம். அந்த மனைவிக்கு எத்தனை மகன்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த சொத்தை பங்கு பிரித்துக் கொள்வார்களாம். இதுதான் அவர்களின் பழக்க வழக்கமாம். மகனை பெற்றுக் கொள்ளாத தாய் இருந்தால், அந்த தாய்க்கு 99 ஆடுகள் மட்டும் கொடுப்பார்களாம். ஆடு கொடுக்க முடியவில்லை என்றால் ஒரு ஆட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் பணமாகக் கொடுத்துவிட வேண்டுமாம். அந்த ஆடுகளையோ, பணத்தையோ அந்த தாய் தன் வாழ்நாள் ஜீவனமாக வைத்துக் கொள்ள வேண்டுமாம். சொத்தில் பங்கு கிடைக்காதாம்.

முழு ரத்த உறவுகளில், ஆண்வழி உறவுகள் பங்காளிகளாக கருதப்படுவர். பெண்வழி உறவுகள் பங்காளிகள் அல்ல. முழுரத்த ஆண்வழி உறவுகளில், முழு-ரத்த உறவு, பாதி-ரத்த உறவுக்கு முன்னரே முன்னுரிமை பெறுமாம்.

 “புதுநாட்டு இடையர் அல்லது இராமாயண சாவடி இடையர்” என்ற இந்த இடையர் ஜாதியில், விதவைகள் அவர்களின் கணவரின் சொத்தில் பங்கு கேட்க முடியாதாம். கணவர் இறந்தவுடன், அந்த விதவை மனைவியானவள், "வெள்ளைச்சீலை" அணிந்து கொண்டு கணவரின் வீட்டை விட்டுப் போய்விட வேண்டுமாம். அதற்கு கூலியாக, “அறுப்புக்கூலி” என்று ஒரு தொகையை வாங்கிக் கொள்ள வேண்டுமாம். அது 100 ஆடுகள் அல்லது ரூ.100 பணம்.இதைப் பெற்றுக் கொண்டால், கணவனின் சொத்தில் பங்கு கேட்க உரிமையில்லையாம். இறந்தவரின் சொத்தை அவரின் மகன்கள் எடுத்துக் கொள்வார்களாம். மகன் இல்லாவிட்டால், பங்காளிகள் என்னும் தாயாதிகள் (இறந்தவர் கூடப்பிறந்தவர்கள் அவர்களின் வாரிசுகள்) அந்தச் சொத்தை எடுத்துக் கொள்வார்களாம்.




 டாக்டர் எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston) அவர்கள் எழுதிய  "தென்இந்தியாவில்
ஜாதியும் பழங்குடிகளும் ”
( castes and Tribes of Southern India Volume II ) என்ற புத்தகத்தில் 'மதுரா (மதுரை) மாவட்ட கெஜட்டர்' (Madura district Gazateer by W.Francis)என்னும் நூலில் 96,97ம் பக்கங்களில் புதுநாட்டு இடையர் சமூக பழக்கவழக்கங்கள்,சட்டங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதில், விதவைகளுக்கு சொத்து கொடுக்காத ஜாதிகளைப் பற்றிய குறிப்பும் உள்ளது. அதில், புதுநாட்டார் என்னும் கூட்டத்தில் புதுவகையாக வாரிசுரிமை இருந்து வருகிறதாம். ஆண் பிள்ளையை பெற்றுக் கொள்ளாத தாய், அவளின் கணவனின் இறப்புக்குப்பின், கணவனின் சொத்தை அவனின் சகோதரனுக்கு கொடுத்துவிட வேண்டுமாம். அல்லது இறந்த கணவனின் தந்தைக்கு அல்லது சித்தப்பன், பெரியப்பனுக்கு கொடுத்துவிட வேண்டுமாம். ஆனால் அந்த விதவைக்கு உரிய ஜீவனாம்ச தொகையை, அந்த கூட்டத்தின் பஞ்சாயத்தில் முடிவு செய்வார்களாம்.
Among these podunattus an uncommon rule of inheritance is inforce. A women who has no male issue at the time of her husband's death has to return his property to his brother,father or maternal uncle. But is allotted maintenance, the amount of which is fixed by a caste panchayat. [*_Reference. From 'Madura district Gazeteer' by w.Francis - Page No. 97_]
ஆனால் தற்போது இந்த சட்டம் (uncommon rule) நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 பிற்காலங்களில் இந்த புதுநாட்டு இடையர்கள் 56 கிராமங்களில் பல்கிப்பெருகினர். மதுரையின் தற்போதைய  வடக்கு மாசி வீதி  பகுதி  திருமலைநாயக்கர் காலத்தில் 'இடையர் வீதி' என்றே அழைக்கப்பட்டதாக திரு.கா.இராமாநுசன் கூறுகிறார்.

வந்தேறிய இடையர்களுக்குத் திருமலை மன்னர் 'நான்கு மால்' இடம் ஒதுக்கிக் கொடுத்துள்ளான் என்று வடக்கு மாசி வீதி வன்னியக்கோனார் தந்த வாய்மொழிச் செய்தியினை கா.இராமாநுசம் பதிவு செய்துள்ளார். வடக்கு எல்லையைக் குறிக்கும் கல் வடக்குவாசல் செல்லத்தம்மன் கோயில் அருகேயும், தெற்கு எல்லையைக் குறிக்கும் கல் வடக்கு ஆவணி மூல வீதியிலும், கிழக்கு எல்லையைக் குறிக்கும் கல் ஆதிமூலம் பிள்ளை சந்திலும், மேற்கு எல்லைக்கான கல் கருவேப்பிலைக்கார சந்திலும் திருமலை மன்னரால் மதுரையில்

 |'இடையர் வீதி'|

க்கான நான்கு மால் எல்லையாக அறிவிக்கப்பட்டதாம். இதில் மேற்கு எல்லையைக் குறிக்கும்  கருவேப்பிலைகாரத் தெருவிலிருந்த எல்லைக்கல் தற்போது காணப்பெறவில்லை. மற்ற மூன்று கற்களையும் எல்லை தெய்வங்களாகக் கருதி இன்றும் இப்பகுதி இடையர்கள் வழிபடுகின்றனர்.

வடக்காவணி மூல வீதியின் மேற்குப்பகுதியில் இருக்கும் கல்வெட்டொன்றின் கூற்றுப்படி தானப்பமுதலியார் தானமாக விட்டுக்கொடுத்த ஒரு தோப்பில் கிழக்கு எல்லையைக் குறிக்குமிடத்தில் 'இடையர் வீதிக்கு மேற்கே' என்று இருக்கிறது.

 பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட சொத்துப் பத்திரப் பதிவுகளில் இடையர் கீழைத்தெரு, இடையர் நடுத்தெரு, இடையர் மேலைத்தெரு என்று அடையாளப்படுத்திய பழக்கம்  இன்றும் இப்பகுதி இடையர்களின் பேச்சு வழக்கில் உள்ளதைக் காணலாம்
திருநெல்வேலியிலிருந்து  பிடிமண்ணாக கொண்டு வந்த தெய்வங்கள் இந்த மேலைத்தெருவிலிருந்து,கீழைத்தெரு வரையுள்ள பகுதிகளில் வைத்து வணங்கினர். மேலும் நெல்லை மாவட்டத்திற்கே உரித்தான வடக்குவாச்செல்லி (வடக்குவாசல் செல்லியம்மன்) இராமாயணச்சாவடி புதுநாட்டு இடையர்களால் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு வந்தேறிய மதுரையிலும் வடக்கு வாசல் பகுதியிலேயே வைத்து வணங்கப்பட்டது. அதுவே தற்போதைய வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோயிலாகும். மேலும் அங்குள்ள பேச்சியம்மன் புதுநாட்டு இடையர்களால் நெல்லை மாவட்டத்திலிருந்து பிடிமண்ணாக கொண்டு வரப்பட்டவள். அதனை 'பிள்ளை காக்கும் பேச்சி' என்று வழங்கப்பட்டதாம். இடையர்கள் தங்களது வாரிசான புதிதாக பிறந்த குழந்தையை இப்பேச்சி முன் கிடத்தி பிள்ளையை நோய் நொடியின்றி காக்குமாறு வேண்டுவராம். மேலும் புதுநாட்டிடையர்களுக்கான பட்டி மேய்க்கும் கிழக்கு எல்லையான வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் இவர்களது மற்றொரு பேச்சியம்மன் வழிபாட்டில் உள்ளாள். அவள்  'பட்டி காக்கும் பேச்சி' என்று அழைக்கப்பட்டாளாம்.  [இத்தகவல் என் ஆருயிர் தோழர் ஜகந்நாத பராங்குச தாஸரோடு தெய்வத்திரு. வே.நா.திருமால்சோலை மணி தாத்தா அவர்களை 02.08.2012ம் ஆண்டு களஆய்வு  நிமித்தமாக சந்தித்த போது கிடைத்தாகும்.] பிள்ளைகாக்கும் பேச்சி, வடக்கு வாசல் செல்லி மற்றும் நாச்சிமுத்து கருப்பணசாமி, பட்டி காக்கும் பேச்சி, வண்டியூர் மாரியம்மன்  ஆகிய தெய்வங்களுக்கு வருடந்தோறும் ஆடி மாதம் தெய்வக்கொடையாக கிடா வெட்டி பொங்கல் வைத்து விழா எடுக்கும் வழக்கம் உண்டு. அது 2007ம் ஆண்டிற்கு பிறகு நடைபெறவில்லை.




ஸ்வாமி இராமாநுசரின் ஆச்சார்யரான பெரியநம்பிகள் வழிவந்த ஒரு ஸ்வாமியால் ஆராதிக்கப்பட்ட ' கம்பத்தடி கிருஷ்ணன்' சிறு கோயில் மதுரை வடக்குப்பகுதியின் மேற்கு பாகத்தில் நாயக்கர் காலத்தில் இருந்தது. இடையர்களுக்கு முன் இப்பகுதியில் இருந்த கவரா நாயுடு சமூகத்தினர் அந்த கம்பத்தடி கிருஷ்ணனை வழிபட்டு வந்தனர். புதுநாட்டு இடையர்களுக்காக அந்த நாயுடு சமூகத்தினர்களை  திருமலை நாயக்கமமன்னர் இடமாற்றம் செய்து ஒரு புதுத்தெருவை உருவாக்கித் தந்தார் என்கிற தகவலும் திருமால்சோலை மணி அவர்கள் கூறியுள்ளார். அந்த தெருவே தற்போதைய 'நாயக்கர் புதுத்தெரு'  என்று வழங்கப்பெறுகிறது. கம்பத்தடி கிருஷ்ணரும் இடைச்சமூகத்தின் வழிபடு தெய்வமாக மாறியது.  கம்பத்தடி தற்போதைய நவநீதகிருஷ்ணன் கோவில் வடக்கு ராஜகோபுரவாசலுக்கு கிழக்கு திசை பாகத்தில் உள்ள யானையின் அருகே உள்ளது. கம்பத்தடி என்பது தீபஸ்தம்பம் ஆகும். இன்றும் பெரியநம்பி வழியினரான (திருப்புல்லாணி வகையறாவிற்கு பிறகு திருக்குறுங்குடி வகையறா) பட்டாச்சாரியரே நவநீதகிருஷ்ணராக மாறிய கம்பத்தடி கிருஷ்ணரை திருவாராதனம் செய்கின்றனர். கவரா நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் ஒருவரால்  ஸ்ரீஜயந்தி 15ம் நாள்  உத்ஸவம் நடத்தப்படுகிறது. திசைக்காவல் செய்யும்  'எட்டு நாட்டுக்கள்ளர் தலைவன்' திருமலை பின்னத்தேவர் வம்சாவழியினருக்கு
இங்கு இராப்பத்து வேடுபறி உத்ஸவத்தில் மாலை பரிவட்டம் தீர்த்த மரியாதைகள் தரப்படுகிறது.

சரி! இனி யாரந்த 'எட்டு நாட்டுக்கள்ளர் தலைவன்' பின்னத்தேவன் என ஆராயத் தொடங்குவோம். அதனை
அடுத்த பதிவு -Post ல பார்ப்போம்.

             அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்








Saturday, September 22, 2018

இராமாயணச் சாவடி இடையர்கள் ( பகுதி -2)


புது நாட்டு இடையர்கள் மற்றும் எட்டு நாட்டுக் கள்ளர் பற்றிய கதைகளை அறிவதற்கு முன்பு
ஸ்ரீமான். மு.இராகவ அய்யங்கார் எழுதிய

 | 'வேளிர் வரலாறு'  |

பற்றி முதலில் சற்று தெரிந்து கொள்வோம்.

பழைய சங்கநூல்களிலே, வேளிர் என்ற ஒரு கூட்டத்தார், தமிழ்ப் பேரரசர்களாகிய சேர சோழ பாண்டியரை அடுத்துப் பல விடங்களினுங் கூறப்படுகின்றனர்; இதனை “பண்கெழு வேந்தரும் வேளிரும்” எனப் புறநானூற்றினும், “இருபெரு வேந்தரொடு வேளிர்” என மதுரைக்காஞ்சியினும், “வேந்தரும் வேளிரும்” எனப் பதிற்றுப்பத்திற் பலவிடங்களினும் வருதலால் அறியலாம். இதனால், மூவேந்தரையுமடுத்து முற்காலத்தே தமிழ்நாட்டில் மதிக்கப்பட்ட சிற்றரசருள், இவ்வேளிரே முற்பட்டவர் என்பது விளங்கும். அன்றியும் “தொன்முதிர் வேளிர்” (அகம் - 258; புறம் - 24) “நாற்பத்தொன்பது வழிமுறைவந்த வேளிர்” (புறம் - 201) “இருங் கோவேள் மருங்கு” (பட்டினப்பாலை) “எவ்விதொல்குடி” (புறம் - 202) என நூல்களிற் காணப்படுதலின், இன்னோர் பண்டைக்கால முதலே தமிழ்நாட்டில் விளங்கியிருந்தவர் என்பதும் தெளியப்படுகின்றது என்கிறார் மு.இராகவ அய்யங்கார்.
வேளிர் வரலாற்றைப்பற்றித் தமிழ்நாட்டில் வழங்கிவந்த பழைய செய்திகள் சிலவற்றை, உரைஆசிரியர் நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரவுரையில், அடியில் வருமாறு குறிப்பிடுகின்றார்:-

||"தேவரெல்லாங்கூடி 'யாம் சேரவிருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர்' என்று அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர்.....
துவராபதிப்போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி வேளிர் உள்ளிட்டாரையும், அருவாளரையுங் கொண்டுபோந்து காடுகெடுத்து நாடாக்கி.......... பொதியிலின்கணிருந்தனர்" ||- எனக்காண்க.

 இவ்வரலாற்றுள், "துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண்" எனத் துவராபதிக்கும் திருமாலுக்கும் சம்பந்தங் கூறப்படுதலால், அத்தொடர், துவாரகையைப் புதிதாக நிருமித்து ஆட்சிபுரிந்த கண்ணபிரானைப்
பற்றியதென்பது எளிதிற் புலப்படத்தக்கது. இனி, மேற்கூறப்பட்ட செய்திகளுள், 'அகத்தியமுனிவர் துவாரகை சென்று கண்ணபிரான் வழியினராகிய அரசரையும் வேளிரையும் தென்னாட்டிற் குடியேற்றினர்" என்பதே, நாம் இங்கு ஆராய்தற்குரியது. அகத்தியனார் தென்னாடுபுகுந்த வரலாற்றைப்பற்றிப் புராணங்களிற் சொல்லப்பட்டிருப்பதை ஒத்தே மேற்கூறிய செய்திகள் பெரும்பாலும் அமைந்துள்ளனவாயினும், கண்ணன்வழிவந்தோர் பலரை அம்முனிவர் தம்முடன் கொணர்ந்தாரென்பது அப்புராணங்களிற் கூறப்பட்டிருப்பதாக இப்போது தெரியக்கூடவில்லை. எனினும், இச்செய்தியே, "வேந்துவினையியற்கை" என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் அவதாரிகையிலும்-"இது, மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கின்றது" (பொருளதி - 32) என  மற்றும் ஒருமுறை எடுத்தோதி வற்புறுத்தப்பட்டுளது.
[வேளிர் வரலாறு     ]

  " யது என்பான், பாண்டவரின் மூதாதைகளில் ஒருவனாகிய யயாதிக்குத் தேவயானை வயிற்றில் உதித்த புத்திரன். இவன் வம்சம் பல்கிப் பலகிளைகளாகி அநேக பிரசித்திபெற்ற ராஜர்களைத் தந்தது. யதுவின் மூத்தகுமாரனாகிய ஸகஸ்ரஜித்தினாலே ஹேஹய வமிசமாயிற்று. அவ்வம்சத்திலே கார்த்த வீர்யார்ச்சுனன் என்ற பிரசித்தி பெற்ற அரசன் தோன்றினான். அவன் சந்ததியிலே தாளஜங்கர்கள் தோன்றி விளங்கினர். யதுவின் இரண்டாம் புத்திரனாகிய குரோஷ்டுஷ வம்சத்திலே பிரசித்தி பெற்றவர்கள்--சசிபிந்து, சியாமகன், விதர்ப்பன் என்பவர்கள். இவருள் விதர்ப்பனால் விதர்ப்ப ராஜவம்சம் வந்தது. விதர்ப்பன் மூன்றாம் புத்திரனாலே சேதி வமிசம் வந்தது. இரண்டாம் புத்திரன் வமிசத்தவனாகிய சாத்வதனால் போஜ வமிசமும், அந்தக வமிசமும், விருஷ்ணிக வமிசமும் வந்தன. இவற்றுள், விருஷ்ணிக வமிசத்திலே தான்  கண்ணபிரான் அவதரித்தது.(அபிதானகோசம், யது என்ற தலைப்பின்கீழ்க் காண்க.)

யது வமிசத்தோர் ஆதியிற் கங்கை பாயுந் தேசங்களிற் பல்கிப் பெருகியகாலத்தே, அன்னோர் பகைவர்களால் துன்பமுறாது வாழ்தல்வேண்டி, அக்குலத் தலைவராகிய கண்ணபிரான், மேல்கடற்பக்கத்தே துவாரகையைப் புதிதாக நிருமித்து, அதனைச் சூழ்ந்து கிடந்த காட்டுப் பிரதேசங்களைத் திருத்தி நாடுகளாக்கி எண்ணிறந்த யாதவர்களை ஆங்குக் குடியேற்றித் தாம் அவர்கட்கு இரட்சகராக நின்று உதவி வந்தனர் - என்ற செய்தி புராண இதிகாசங்களிற் கேட்கப்படுகின்றது. கண்ணபிரான் தன்னடிச்சோதிக்கு(திருப்பரமபதம்) எழுந்தருளுங் காலத்தே, இவ் யாதவரிற் பலர் தமக்குள் விளைந்த பெருங் கலகத்தாற் போர்புரிந்து மாணடனரென்பதும், அக்காலத்துப் பலர் அவ்விடத்தை விட்டு வெளியேறினர் என்பதும், இதிகாசங்களால் அறியப்படுகின்றன.
இச் செய்திகளால், யாதவ குலத்தார்க்குப் பலதேசங்களிலும் அடுத்தடுத்துக் குடியேறும்படி நேர்ந்து வந்ததென்றும், அம்முறையில், , அவ்யாதவர்கள் தாம் பரவியிருந்த நாட்டுக்குந் தெற்கணிருந்த தமிழகத்துக் காடுகளைத் திருத்தி, குடியேறினர் என்று கொள்வதிற் புதுமையொன்றுமில்லை என்க.  என்கிறார் மு.இராகவ அய்யங்கார். (வேளிர் வரலாறு)

[ஸ்ரீரோமேச சந்த்ர தத்தர் எழுதிய "பழைய இந்திய நாகரீகம்" என்ற அரியநூலின் முதற்றொகுதியில் யாதவரைப்பற்றி எழுதப் பட்டிருப்பதாவது:-
"கண்ணனைத் தலைமையாகக்கொண்ட யாதவர்கள் (வட) மதுரையைவிட்டு நீங்கிக் கூர்ச்சரத்துள்ள(குஜராத்) துவாரகையிற் குடியேறினார்கள். அங்கே அவர்கள் அதிக காலம் தங்கவில்லை. அவர்கள் தங்கட்குள்ளே பெருங்கலகம் விளைக்க, (அவருள் பலர்) துவாரகையை நீங்கிக் கடல்வழியே பிரயாணித்தனர். அங்ஙனம் பிரயாணித்தவர்கள் தென்னிந்தியாவை அடைந்து ஆங்குப் புதுராஜ்யம் (*புது நாடு) ஸ்தாபித்ததாக நம்பப்படுகிறது" ]

தெற்கே பொதிகை மலையிலிருந்து புறப்படும் தாமிரபரணியால் வளம் கொழிக்கும் திருநெல்வேலியின் சுற்றுவட்டாரத்தில் கிருஷ்ணரின் உறவினர்களான துவாரகையெனும் புது நாட்டிற்கு குடிபெயர்ந்த
'புதுநாட்டு இடையர்கள்' பதிணென் குடி வேளிர் என்பதில் ஐயமில்லை. தருமத்துப்பட்டி செப்பேட்டிலும் "பதினெட்டு பட்டி கோங்கிமார்கள்" என்றே அடையாளம் காணப்படுகின்றனர். துவாரகை புது நாட்டு இடையர்கள்
திருநெல்வேலி பகுதிக்கு அப்போது வந்தேறிய போது வேணு வனமாக (மூங்கில் காடு) இருந்தது.
நெல்லையப்பர் கோயில் ஸ்தல புராணத்தில் வரும் இராமக்கோனார் புதுநாட்டு இடையரே ஆவார்.
அதன் ஸ்தலபுராணக்குறிப்பு:-
முன்பொரு காலத்தில் தென்காசி அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் இராமகோனார். அப்படி ஒருநாள் அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன இராமகோனார் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.
அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு திருநெல்வேலி கோயில் உருவானது. இந்த ஸ்தல புராணத்தின் படி  திருநெல்வேலி ஊர் இராமக்கோனார் மூலமாகவே உருவாகியது என்பது புலனாகிறது. காடு வெட்டி நாடு திருத்தி 'புது நாட்டை' இங்கும் உருவாக்கினார்கள். மதுரா-துவாரகா-பேளூர் துவாரசமுத்திரம்-பொதியில் என்ற புலம் பெயர் பயணமானது திருநெல்வேலியெனும் மற்றுமொரு புதுநாட்டில் நிலைபெற்றது.
சங்க காலப் பாண்டியமன்னர்களின் ஆளுமைக்கு வந்த இடையர்கள் தங்கள் பூர்வ பதிணென்குடி இதிகாச நாயகர்களான வாலியோன்(பலதேவன்),மாயோன்(கண்ணன்),நப்பின்னை ஆகியோரை வழிபடு தெய்வங்களாக கொண்டாடினர். அகத்தியரின் சீடரான தொல்காப்பியரும் 'மாயோன் மேய காடுறை உலகமும்' என்று முல்லை நில மக்களாக இவர்களை வரையறுத்தார்.
சங்கம் மருவிய காலத்தில் களப்பிரர்கள் ஆட்சியின் கீழ் புதுநாட்டு இடையர்கள் வந்தனர்.
களப்பிரர் ஆட்சியில் சமண,பௌத்த சமயங்கள் ஆதிக்கம் செலுத்தின. இதனால் முல்லைத்திணை மக்களுக்கு சமண,சமய தெய்வங்களான சாத்தான் அல்லது சாஸ்தா வழிபாடு நடைமுறைக்கு வந்தது. இருந்த போதிலும் சமண,பௌத்த சமயங்களும் கொண்டாடும் பலராம,வாசுதேவகிருஷ்ண வழிபாட்டிற்கு தடையேதும் ஏற்படவில்லை. கடுங்கோன் பாண்டியன் வருகைக்குப்பின் களப்பிரர் ஆட்சி முடிவுக்கு வந்தது. நாயன்மார்கள்,ஆழ்வார்கள் ஆகியோர்களின் பக்தி இலக்கியங்களால் சைவ,வைணவ சமயங்கள் வளர்ச்சியுற்றன. பாண்டிய பேரரசின் ஆட்சியின் கீழ் மிகச்செழிப்பமான பொற்காலமாக புதுநாட்டு இடையர்களுக்கு அமைந்தது.

கி.பி.1310 ல் தென்னாடு வந்த  மாலிக்கபூர்
மதுரை,திருச்சி,சிதம்பரம்,தஞ்சை, நெல்லை போன்ற தமிழக வளநாடுகள் முழுவதையும் சூறையாடினான். அக்காலகட்டத்தில் புதுநாட்டிடையர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
விஜயநகரத்து குமாரகம்பணர் காலத்தில் மதுரையில் நாயக்கர் ஆட்சி தொடங்கியது. எனினும் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்திலேயே மதுரையில் நாயக்கர் ஆட்சி வலிமை பெற்றது. விசுவநாத நாயக்கர் கி.பி. 1529 இல் மதுரை நாயக்க ஆட்சியை ஏற்றார். அது முதற்கொண்டு நாயக்கராட்சி மதுரையில் வளம் பெற்றது. 
விஸ்வநாத நாயக்கருக்குப் பின் (கி.பி.1529 - 1564 )ஆண்ட மதுரை நாயக்க மன்னர்கள்

• முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 - 1572 )
• வீரப்ப நாயக்கர் (1572 - 1595)
• இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)
• முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (இரண்டாம்கிருஷ்ணப்ப நாயக்கரின் சகோதரர் விசுவப்ப நாயக்கரின் மகன்)
(1601 - 1609)
• முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன்)
(1609 - 1623) ஆவார்.

விஜயநகர ஹிந்து சாம்ராஜ்யம் தென்னாட்டில் ஆதிக்கம் பெற்ற பிறகு புதுநாட்டிடையர்கள் மீண்டும் வளம் பெற்றனர்.
விஜயநகர ஆட்சியில் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியின் கீழ்  திருநெல்வேலி பகுதி வந்தது. நாயக்க மன்னர்கள் 72 பாளையங்களைக் கொண்டு நெல்லை மாவட்டத்து சைவ,வைணவ ஆலயங்களை சிற்பக்கூடங்களாக மாற்றிக்கொண்டிருந்தனர்.
முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1609 - 1623) ஆட்சிக் காலத்தில் மதுரை, தஞ்சை நாயக்கர்களிடையே போர் மூண்டதால் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார்.
இதனால் மதுரை நகரம் பொலிவிழந்தது.
கி.பி.1623ல் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரின் இளைய மகனாக திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு (திருமலைநாயக்கர்)  முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் மதுரை நாயக்கர்கள் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.

திருமலை நாயக்கர் ஆட்சியில் 1624ல் திருச்சியிலிருந்து மீண்டும் மதுரையைத் தலைநகராக மாற்றினார்.
திருமலை நாயக்க மன்னர் பொலிவிழந்த மதுரையை சீரமைத்துக் கொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி பாளையக்காரன் ஒருவன் புதுநாட்டு இடையர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். அது பற்றிய கதையை அடுத்த பதிவு- Post ல பார்ப்போம்.

அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்


Thursday, September 20, 2018

இராமாயணச் சாவடி இடையர்கள் (பகுதி - 1)





தென்னிந்திய குலங்களும் குடிகளும் (Castes and Tribes of Southern India. published in 1909) என்கிற ஆங்கில நூலில்  எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston) என்கிற ஆங்கிலேயர் மதுரை வடக்கு மாசி வீதி 'இராமாயணச்சாவடி இடையர்'களின் பூர்வீகம் பற்றி கூறியுள்ளார். கிட்டத்தட்ட 300 இனக்குழுக்களைப் பற்றி ய தகவல்கள் அடங்கிய ஏழு பாகங்கள் கொண்ட அந்நூலின் இரண்டாம் பாகத்தில் 'இடையர்' பற்றி (352 முதல் 366 ம் பக்கங்கள் வரை) கூறும் போது  இராமாணச்சாவடி இடையர்களின் பூர்வீகக் கதையை பதிவு செய்துள்ளார்.


திருநெல்வேலியிலிருந்து
மதுரை வடக்கு மாசி வீதி பகுதிகளில் புலம் பெயர்ந்த புதுநாட்டு இடையர்களோடு, கவரா நாயுடு மற்றும் பிரமலைக்கள்ளர் சமூகத்தினரும் தொடர்பு கொண்டிருந்தனர். அத்தகைய நாட்டு இடையர் சமூக மக்களின் பூர்வ கதையை வரலாற்றுத் தரவுகளோடு ஆய்வியல் அடிப்படையில் ஆதாரங்களுடன் விரிவான தொகுப்புக் கட்டுரையாக உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.  தென்னிந்திய இனக்குழுக்களில்
'நாயக்கர்கள்' என்று பொதுவாகச் சொல்லப்படுபவர்கள் கம்பளத்தார்கள் என்றும் தொட்டியர் என்றும் சொல்லப்படுகிறார்கள். கொல்லவார், சில்லவார் .தொக்லவார், கம்மவார், பலிஜா என பல்வேறு உட்பிரிவுகள் கொண்ட ஆந்திரப்பகுதி மக்கள் இவர்கள். அதிகமும் பாறைகள் நிறைந்த 'ராயலசீமா' பகுதியில் ஆடுமாடு மேய்த்தும் பொட்டல் வேளாண்மை செய்தும் வாழ்ந்தவர்கள்.

மதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் (J. H. Nelson-1898 )மதுரை ஆவணப்பதிவே (Madura Country Manual) முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமானாவராக இருந்தபோது அதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படாத மதுரை நாயக்கர் வரலாற்றை விரிவான ஆய்வுக்குப்பின் ஆங்கிலத்தில் ‘மதுரைநாயக்கர் வரலாறு’ எனும் நூலினை எழுதினார். இந்நூல் 1924ல் சென்னைப்பல்கலை வரலாற்று பேராசிரியரான எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்காரின் முன்னுரையுடன் 'The history of Nayaks of Madura' என்ற தலைப்பில் வெளிவந்தது.  இந்நூலை அடியொற்றி தமிழறிஞர் அ.கி.பரந்தமனார் தமிழில் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ தெளிவாகவும் சுருக்கமாகவும் நாயக்கர்களின் ஆட்சியையும் வீழ்ச்சியையும் சொல்லும் வரலாற்று நூலாகும்.
 பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவரான  பாண்டியர்களுக்கு
உலகில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு உண்டு. அதில்
நாம் இப்போது காணப்போவது 14ஆம் நூற்றாண்டின் கோரமுகம். மாறவர்மன் குலசேகரனுடைய மகன்கள் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் இருவருக்கும் நடந்த பங்காளிச் சண்டை .

பாண்டிய மன்னர்கள் வாரிசு சண்டையிட்டுக்கொண்டு பாண்டிய அரசை துண்டு துண்டாக வலிமை யற்றதாக ஆக்கி வைத்து இருந்தனர். இந்த பங்காளிச்சண்டையால்
கி.பி.1311ல் மாலிக் கபூர், தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி காஞ்சிபுரம்கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை,திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரைமீனாட்சியம்மன் கோவில்களுக்குபெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார்.

இஸ்லாமிய வரலாற்று அறிஞரான 'ஜியாவுதின் பருணி'யின் கூற்றுப்படி, மாலிக் கபூர், தென்னிந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களையும் மற்றும் 240 டன் தங்கத்தையும், 612 யானைகள், 20,000 குதிரைகள் மேலேற்றி தில்லிக்கு வெற்றி வாகையுடன் திரும்பிச் சென்றான் எனக் கூறுகிறார். தில்லி சுல்தான் அலாவூதின் கில்ஜி, மாலிக் கபூரின் வெற்றிகளையும், கைப்பற்றிய தென்னிந்த்திய செல்வங்களைக் கண்டு பாராட்டி, மாலிக் கபூருக்கு தில்லி சுல்தானகத்தின் “தலைமைப் படைத்தலைவர்” பதவி வழங்கி பாராட்டினார்.

 இந்த மாலிக்காபூரின் படையெடுப்பு தென்னகப்பேரரசுகளை எல்லாம் அழித்து தென்னிந்தியாவையே சீர்குலைத்து இடிபாடுகளும் சுடுகாடுகளும் மட்டும் எஞ்சச்செய்து டில்லி மீண்டது. மாலிக்காபூர் விட்டுச்சென்ற தளபதிகள் சிற்றரசர்களாக மாறி கொடுங்கோல் ஆட்சியாகச் செய்துவந்தனர். அவர்களை ஒருங்கிணைத்து துருக்கி சுல்தான்கள் டெல்லியில் இருந்துகொண்டு தென்னகத்தை ஆண்டனர்.

இந்நிலையில் சிருங்கேரி பீடத்தைச் சேர்ந்த மாதவர் என்ற துறவி (ஸ்ரீவித்யாரண்யர் என்று இவருக்கு பட்டபெயர் உண்டு. ) துங்கபத்ரா நதிக்கரையில் ஆனைக்குந்தி என்ற மலையடிவாரக் காடுகளில் தங்கியிருந்தார். அங்கே அவர் சந்தித்த 'ஹரிஹரர் புக்கர்' என்ற இரு சகோதரர்கள்  அவர் கவனத்திற்கு வந்தனர். அவர்கள் ஏற்கனவே காகதீய அரசு போன்ற பல அரசுகளில் போர்ப்பணியாற்றியவர்கள். ஆனைக்குந்தியில் இருந்த பழைய யாதவ அரசொன்றின் அரசகுலத்தவர். சுல்தான்களால் இளமையிலேயே சிறைப்பிடிக்கப்பட்டு டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கே மதமாற்றம் செய்யப்பட்டனர். மீண்டும் இப்பகுதிக்கு ஆட்சியாளர்களாக அனுப்பட்டனர். அவர்கள் தங்களுக்கென சிறு படை கொண்டிருந்தனர். 1336ல் அவர்களைக் கொண்டு அந்த மலையடிவாரத்தில் 'விஜய நகரம்' என்ற நகரத்தை நிறுவச்செய்தார் மாதவர்.
[அக்காலத்து அரசியல் நிலையில்லாமையைப் பயன்படுத்திக் கொண்டு நிலைபெற்று வளர்ந்து மூன்று நூற்றாண்டுக்காலம் நீண்ட விஜய நகரப் பேராரசு தென்னிந்தியாவில் இந்துப்பண்பாட்டை நிலைநாட்டிய மாபெரும் சக்தியாகும். இன்று இந்தியாவில் விஜயநகர ஆட்சி இருந்த பகுதிகளில்மட்டுமே மாபெரும் ஆலயங்கள் எஞ்சியுள்ளன.]

புக்கரின் மகனான குமார கம்பணன் அன்று துருக்கி சுல்தானின் தளபதியான அல்லாவுதீன் சிக்கந்தர் ஆட்சியில் மதுரை சிதைந்து பாழடைந்து கிடப்பதை அறிந்து 1371ல் மதுரைமீது படையெடுத்து வந்து கைப்பற்றினார். குமார கம்பணரின் மனைவியான கங்கம்மாதேவி எழுதிய ”மதுராவிஜயம்’ என்ற சம்ஸ்கிருத காவியம் இந்நிகழ்ச்சியை வர்ணிக்கிறது. அப்போது மதுரை மீனாட்சி ஆலயம் இடிக்கப்பட்டு மதுரை தேவி திருவாங்கூரில் [குமரிமாவட்டத்தில்] உள்ள சிறு மீனாட்சியம்மை கோயிலில் வைக்கப்பட்டிருந்தாள். குமார கம்பணன் மதுரை கோயிலை மீண்டும் கட்டவும் தேவியை மீண்டும் பிரதிஷ்டை செய்யவும் ஏற்பாடு செய்தார்.
விஸ்வநாத நாயக்கனின் அமைச்சர் அரியநாத முதலியார் தென்னகம் முழுக்க தன் படையால் வென்று நாயக்க சாம்ராஜ்ஜியத்தை அமைத்தார். நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கோயிலை அரியநாதர் அமைத்தார். அரியநாதர் தான் தென்னகத்தை 72 பாளையபப்ட்டுகளாக பிரித்து அவற்றுக்கு பாளையக்காரர்களை முதன்முதலில் நியமித்தார்.

அதன் பின் நாயக்க வம்சம் மதுரையில் தொடர்ந்து அரசாண்டது. அதில் குறிப்பிடத்தக்க இருவர் திருமலை நாயக்கரும், ராணி மங்கம்மாளும் ஆவார்கள்.  கிட்டத்தட்ட தஞ்சை தவிர உள்ள தமிழகத்தை முழுக்க ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் 'திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு' என்பதாகும். முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் இவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். 


மதுரை மன்னர் திருமலை நாயக்கர் 1635இல் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக புதுமண்டபத்தைக் கட்டினார். பழைய மதுரை நகரைத் திருத்தி அமைத்தார். 'திருமலை நாயக்கர் மகால்' என அழைக்கப்படும் அரண்மனை திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார்.
திருமலை நாயக்கரின் சிறப்பியல்பு சைவ, வைணவ ஆலயங்களுக்கு சீராக திருப்பணி செய்ததாகும். கிறித்தவ மதபோதகர்களை ஆதரித்திருக்கிறார். இஸ்லாமிய தர்காக்களையும் ஆதரித்திருக்கிறார். இன்றைய மதுரை என்பது திருமலை மன்னரின் ஆக்கம் என்றால் மிகையல்ல. மதுரையின் தெருக்கள் ஆலயங்கள் மாபெரும் தெப்பக்குளங்கள் சுற்றியுள்ள மாபெரும் ஏரிகள் இன்றுள்ள பெரும் திருவிழாக்கள் எல்லாமே திருமலை மன்னாரால் உருவாக்கப்பட்டவை.
திருமலை நாயக்கர் ஆண்ட பகுதிகள்:-

திருநெல்வேலி நாடு, திருவிதாங்கூர் ஆட்சிபகுதியின் ஒரு பகுதி இத்துடன் தமிழ்நாட்டில் உள்ள மதுரை, திண்டுக்கல்,
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை,
மணப்பாறை, கோயம்புத்தூர், சேலம் மற்றும்
திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகள் நாயக்க மன்னரால் ஆளப்பட்டன.
இங்கு குறிக்கப்பட்டுள்ள ஊர்கள், அந்த ஊர்களுடன் சேர்த்து அந்தந்த ஊர்களை தலைநகராக கொண்ட பகுதிகளையும் குறிக்கின்றன. இருப்பினும் இந்த பகுதிகள் திருமலை நாயக்கரின் ஆளுகையில் இருந்தாலும் இவற்றை நேரடியாக ஆட்சி செய்தவர்கள் அந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட பாளையக்காரர்கள்தான்.

( குறிப்பு:- பாளையம் (ஆட்சி நிர்வாக முறை) "பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். பாளையக்காரர்கள் தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.)

 கி.பி. 1656ல் 70 வயதாகி இருந்த திருமலை நாயக்கரை மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன், மதுரை நாட்டிற்கு கம்பையா என்ற மிகக் கொடியவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று வந்தான். மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்குள் புகுந்து ஆண், பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனுப்பி வைத்தான். அதோடு நிறுத்தாமல் கொள்ளையும் அடித்தான். சிக்கியவர்களை வெட்டிக் கொலைகளும் செய்தான். இதை அறிந்த திருமலை மன்னர், தன்னரசு நாட்டுத் தலைவர் திருமலை பின்னத்தேவருக்கும், இராமநாதபுரம் சேதுபதிக்கும் தன் பட்டத்து ராணி  மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைக் கண்டவுடன் தாமதியாமல் தன் படைகளுடன் வந்து மதுரை படைகளையும் ஒன்று சேர்த்து கடும் போர் செய்த மைசூர் படைக்கு பெரிய சேதத்தை உண்டாக்கி விரட்டியடித்து விட்டு மதுரையைக் காத்தார். இந்த போரில் இரு தரப்பினரிலும் உயிர் விட்டவர்கள் அதிகம்.

அதே நேரத்தில் தன்னரசு படைகள், கன்னிவாடி, விருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். 'திருமலை பின்னத்தேவர்' தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது தளபதியாக இருந்த தளபதி கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையம் ஆறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். மைசூர் மக்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் தொல்லை கொடுக்காமல் தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை நாயக்க மன்னர், பின்னத்தேவருக்கு 'மூக்குப்பறி' என்ற பட்டம் வழங்கினார். சேதுபதிக்கு 'திருமலை சேதுபதி'என்ற பட்டமும் 'ராணி சொல் காத்தான்' என்ற பெயரும் வழங்கினார். இதோடு நிற்காமல் சேதுபதி இனிமேல் நீ எனக்கு கப்பம் கட்ட வேண்டாம் என்ற உத்தரவும் கொடுத்து இராமநாதபுரத்திற்கு தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.
சரி! நாம் இராமாயணச்சாவடி இடையர்களின் 'மதுரை வருகை' பற்றிய கதையை தொடங்குவோம் .....!

          || கி.பி.1635ம் ஆண்டு ||

திருமலை மன்னர் புதுமண்டபம் கட்டிக்கொண்டிருந்த காலகட்டம்.
திருநெல்வேலி வட்டாரத்தில் வாழ்ந்த புதுநாட்டு இடையர்களுக்கு அங்கிருந்த ஒரு பாளையக்காரன் தொந்தரவு சகிக்க முடியாமலிருந்தபடியால் அந்த புதுநாட்டு இடையர்கள் ஒன்று சேர்ந்து மதுரைக்கு வந்து திருமலை நாயக்க மன்னரிடம் தஞ்சம் புகுந்தார்கள். திருமலை நாயக்கரும் எட்டு நாட்டு கள்ளர் தலைவன் திருமலை பின்னதேவரை புதுநாட்டு இடையர்கள் அதிபதியாக நியமித்து அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பரிபாலித்து வரும்படியாகச் செய்தார்.
யார் அந்த நாட்டு இடையர்கள்? யார் அந்த
 எட்டு நாட்டுக் கள்ளர்?
இது பற்றிய ஆதாரக்கதைகளை விரிவாக அடுத்த பதிவு -Post ல பார்ப்போம்.

               அன்புடன்

     ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 

Sunday, September 9, 2018

வட்டக்கருவறை


ஒரு சமயத்தார்க்குரிய கோயில் மற்றொரு சமயத்தாருடைய கோயிலாக மாறுவதோ மாற்றப்படுவதோ சமய இயக்கங்களின் வரலாற்றில் வியப்பான செய்தியாகாது. அவ்வாறு பௌத்த விகாரையினை திருமாலுக்கான வழிபாட்டுத் தலமாக இளம்வழுதியின் பரிபாடல் மற்றும் பூதத்தாழ்வாரின் பாசுரம் ஆகியன பாடப்பட்ட காலத்திற்கு முன்பே மாற்றியிருக்க வேண்டும் என்கிற நோக்கில்
 அழகர் கோயில் எனும் ஆய்வு நூலில் அழகர்கோயிலின் தோற்றம் எனும் இரண்டாவது இயலில் ஒரு சர்ச்சைக்குரிய விவாதத்தை முன் வைக்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவன்.

 பண்டைக் காலத்திலே மதுரையிலே சமணசமயமும்,பௌத்த சமயமும் சிறப்படைந்திருந்தது. மதுரையைச் சூழ்ந்துள்ள மலைகளிலும் பாறைகளிலும் செதுக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள், கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே அங்குச் சமணர் இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன.

மதுரையைச் சூழ்ந்திருந்த எட்டுச் சமண மலைகளில் இருந்த எண்ணாயிரம் சமணரும் கழுவேறி னார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது. ‘‘எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்’’ என்பது பெரியபுராண வாசகம்.
தக்கயாகப் பரணியிலும் எண்பெருங் குன்றங்கள் கூறப்படுகின்றன.
‘‘தேவப் பகைவர் நம்முடம்பு
வீங்கத் தூங்கும் வெங்கழுவிற்
சேதப்படும் எண்பெருங் குன்றத்
தெல்லா வசோகும் எரிகெனவே.’’ (218-ஆம் தாழிசை.)

‘‘பரங்குன் றொருவகம் பப்பாரம் பள்ளி
யருங்குன்றம் பேராந்தை யானை - இருங்குன்றம்
என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்
சென்றெட்டு மோபிறவித் தீங்கு.’’

இதில் கூறப்படும் எட்டு மலைகளில் பரங்குன்றம், யானைமலை, இருங்குன்றம் (அழகர்மலை அல்லது சோலைமலை) மதுரைக்கருகில் உள்ளன. மற்ற ஒருவகம் பப்பாரம் பள்ளி அருங்குன்றம் ஆந்தைமலை என்பவை எந்த மலைகள் என்று தெரியவில்லை.இவற்றுள் "இருங்குன்றம்" பற்றி நாம் தெரிந்து கொள்வோம். இதற்குச் சோலைமலை என்றும் பெயர் உண்டு. திருமாலிருஞ்சோலை என்றும் இதற்குப் பெயர் உண்டு. ‘‘ஓங்கிருங்குன்றம்’’, ‘‘சோலையொடு தொடர்மொழி மாலிருங் குன்றம்’’ என்று பரிபாடலில் இம்மலை கூறப்படுகிறது. இது இப்போது யானைமலையைப் போலவே வைணவத் திருப்பதியாக இருக்கிறது. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமணர்கள் இருந்தார்கள் என்பதை இங்குள்ள குகைகளும் பிராமி எழுத்துக்களும் சான்று கூறுகின்றன.
யானைமலையிலிருந்தும் நாகமலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டதுபோலவே இம்மலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டனர் எனத் தெரிகிறது.

இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம் இடபகிரி, வனசைலம், நரசிம்மாத்ரி, கேசவாத்ரி என்ற பல பெயர்களையும் கொண்டுள்ளது. மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள 'சோமசந்த விமானம்' வட்ட வடிவமானது.


கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி (அழகர்) சுந்தரராசப் பெருமாள் அல்லது சோலைமலைக்கரசர் எனப்படுகிறார்.
பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளையும் இக்கோயில் கொண்டுள்ளது.   அழகர் கோயில் மலைக்குகைகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதுகொண்டு இங்குப் பண்டைக் காலத்தில் பௌத்தர்களும் ஜைனரும் வாழ்ந்திருக்க வேண்டும். இங்குள்ள பெரியாழ்வார் நந்தவனத்துக்கு எதிரிலுள்ள குளம் ஆராமத்துக்குளம் எனப்படுகிறது. ஆராமம் என்பது பௌத்த பிட்சுக்கள் வசிக்கும் இடம். (இதனைச் சங்காராமம் என்று வடமொழி நூல்களில் கூறுவர். மணிமேகலைக் காப்பியத்தில் ஆராமம், உவவனம், அறத்தோர் வனம், பூம்பொழில், தருமவதனம் எனப் பலப் பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.)
அன்றியும் இக்கோயிலின் பழைய ஸ்தல விருட்சம் போதி (அரச) மரம் எனப்படுகிறது. இக்குறிப்புகள் யாவும் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்ததென்பதை காட்டுகின்றது.


மேலும் இக்கோயிலின் கருவறை வட்ட வடிவமானதாகும். அதனுள்ளே வட்டவடிவில் ஒரு திருச்சுற்று(பிரகாரம்) உள்ளது. பௌத்த சைத்தியங்களைச் சுற்றி இவ்வாறு வட்ட வடிவ திருச்சுற்று உண்டு என்று தெரிகிறது. மேலும் இந்த சைத்தியங்களை ஒட்டிய துறவிகள் வாழும் விகாரைகளில் நந்தவனமும் குளமும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் பிழை செய்த ஆண் துறவிகள் பிராயச்சித்தமாக நந்தவனத்திற்கு நீரிறைக்கவும், பெண் துறவிகள் கோயில் முற்றத்திற்கு மண் சுமக்கவும் கூடும் என்று மயிலை சீனி வேங்கடசாமி எனும் தமிழறிஞர் பௌத்தமும் தமிழும் நூலில் பதிவு செய்துள்ள தகவல்களை தனது ஆய்வுக்குள் மேற்கோளாக பயன்படுத்துகிறார் தொ.பரமசிவன்.

பௌத்த கட்டடகலையின் அமைப்பினை கொண்டிருந்ததற்கான சான்றாக கோயிலில் சில இடங்களில் வட்டவடிவ தூண்கள் உள்ளன. ( உ.ம்-கர்ப்பகிருகம் அருகேயுள்ள நாலுகால் மண்டபம்,ஆண்டார் மண்டபம்,) மேலும் இரு வட்ட வடிவ தானியக்கிடங்கும் இருக்கிறது குறிப்பிடத்தக்கதாகும்.

சமணர் கோயில்களையும் பௌத்த கோயில்களையயும், வைணவர்கள் கைப்பற்றும் போது முதலில் நரசிம்ம மூர்த்தியை அமைப்பது வழக்கம். அழகர் கோயில் நரசிம்ம வழிபாட்டிற்கு முக்கியமானது எனத்தெரிகிறது. அழகர் கோயில்  ஆழ்வார்களால்  பாடப்பட்ட காலத்திலும் இங்கு வைதீக சமயத்தினர்க்கு புறச்சமயிகளான சமண,பௌத்தர்கள் வாழ்ந்திருந்ததனை அறியலாம் என்கிறார் பேரா.தொ.பரமசிவன்.




மயிலை சீனி.வேங்கடசாமி தரும் இரண்டு சான்றுகளுடன், நரசிம்ம வழிபாடு, பிரயோக சக்கரம், இலக்கிய தல புரிணக்குறிப்புகள், கருவறையின் பெயரும் அமைப்பும், தலை மழிக்கும் வழக்கம் ஆகிய செய்திகளும் எனப் பல சான்றுகளுடன் பேரா. தொ.பரமசிவன்  வலியுறுத்துவது 'இக்கோயில் பௌத்தக் கோயிலாக இருந்தது' என்னும் கருத்து இவ்வியலில்  நிலைநிறுத்தப்படுகிறது.
ஆய்வின் போக்கு இவ்வாறு இருக்க
இக்கோயில் தற்போது வைணவ சமயத்தினரின் 108 திருப்பதிகளிலே ஒன்றாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். வைணவ சமயத்தினரிடமிருந்து  இக்கருத்தை பெரிய அளவில் யாரும் எதிர்க்கவில்லை. ஏன்?  பழமுதிர்சோலை என்ற கௌமார சமயத்தவர் வாதத்திற்கும் பெரிய அளவில் எதிர்ப்புகள் காட்டவில்லை.


             அன்புடன்

     ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்









Wednesday, September 5, 2018

ஆறுபடையா? ஆற்றுப்படையா?

ஆறுபடையா? ஆற்றுப்படையா?

• ஆற்றுப்படை விளக்கம்

ஆறு என்னும் சொல்லுக்க வழி அல்லது நெறி என்பது பொருளாகும்.  ஆற்றுப்படுத்தும் என்றால் அறிந்தானொருவன் அறியாதான் ஒருவனை வழிப்படுத்தலாகும். வறுமையோடு இருப்பவனை அவன் துயர்களைப்  போக்கி  பெருஞ்செல்வம் பெறுமாறு அவரையும் வழிப்படுத்துதலே  ஆற்றுப்படை என்னும் நூலாகும். இலக்கியச்  சொல்லகராதியும் ஆற்றுப்படுத்தலுக்கு வழிப்படுத்தின என்ற பொருளையே கூறுகின்றன. ஆற்றுப்படை என்பது ஒருவகையான பாடல் மரபுடையது. புரவலரைக் காணாது வறுமையில் வாடுகின்றான் ஒரு கலைஞன். புரவலன் ஒருவனைக் கண்டு பரிசில்கள் பெற்று சீரும் சிறப்புமாகத் திரும்புகின்றான்  மற்றொரு கலைஞன். இவன் அவனைப் பார்க்கின்றான், இரக்கத்தால் அவன் வாழ வழி காட்டுகின்றான். அவன் புரவலனிடத்து சென்றால் வறுமை தீரும், கலை வளரும், தன்மானம் அழியாது எனக் கூறி பாணர், கூத்தர், பொருநர், விறலியர், புலவன் போன்றோர்  வள்ளலிடம் பெற்ற பெருஞ்செல்வத்தை  தாம் பெற்றவற்றை எல்லாம் பெறுமாறு வழிப்படுத்துதல் ஆற்றுப்படையாகும் என்று கலைக்களஞ்சியம் கூறுகின்றது.

• ஆற்றுப்படை இலக்கணம்

தொல்காப்பியம் ஆற்றுப்படை நூலுக்கு இலக்கணம் கூறுகிறது. வள்ளல் ஒருவரிடம் தன் வறுமையைப் போக்கும் வளங்களைப் பெற்றுவந்த ஒருவர். கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலானோரை அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை.
புறத்திணையின்  திணைகளில் ஒன்றான பாடாண் திணையின் துறைகளில் ஒன்றாகத் தொல்காப்பியர் ஆற்றுப்படையைக் குறிப்பிடுகிறார்.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம் – தொல்காப்பியம், (புறத்திணையியல்- 88)

சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஆற்றுப்படைப் பாடல்கள் உள்ளன. சங்கநூல் பத்துப்பாட்டில் ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை நூல்கள்.
அவற்றுள் திருமுருகாற்றுப்படை நக்கீரால் பாடியதாகும். இவர் முருகப் பெருமானின் மீதுள்ள அன்பின் காரணமாக 317 அடிகளில் ஆசிரியப்பாவால் பாடப் பெற்றவையாகும்.
திருமுருகாற்றுப்படை
சங்க இலக்கியத்தில் சமய நெடும் பாடலாகவும்,  பதினோராந்திரு முறையில் வைத்துப் போற்றப் பெறுவதாகவும் அமைந்துள்ளன.

முருகனிடம் அருள் பெற்ற புலவர் இன்னொரு புலவனைப் பார்த்து முருகனின் வீடுகளுக்குச் சென்று அவனைப் போற்றி வணங்கி யாராலும் பெற முடியாத பரிசு பெற்றுக்கொள் என்ற கருத்து இந்நிலையில் உள்ளது.
Aartruppadai is a literary device by which a bard or a minstrel who has received bountiful gifts from some wealthy patron is supposed to direct another to the same Maecenas. This gives the occasion to the poet, among other topics, to describe in great detail the natural beauty, fertility, and resources of the territory that has to be traversed to reach the palace of the patron. Tirumurugartruppadai or 'Guide to Lord Murugan' suggests that those who need spiritual guidance should seek out Lord Murukan.
புலவர் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்தியதால்  இந்நூல் 'புலவர் ஆற்றுப்படை' என்றும் கூறுவர். (வச்சணந்திமாலை உரை என்னும் 13 ஆம் நூற்றாண்டு நூல் நிருமுருகாற்றுப்படையைப் புலவராற்றுப்படை என்றும், மலைபடுகடாம் நூலைக் கூத்தராற்றுப்படை என்றும் குறிப்பிடுகிறது)



ஆற்றுப்படையா? ஆறுபடையா? என்று
'அழகர் கோயில் 'எனும் நூலில்
ஆய்வின் ஆசான் பேராசிரியர் தொ.பரமசிவன்  அவர்கள் விரிவாக விவவரித்துள்ளார்.
இந்த நூல் நான் பலமுறை ரசித்து படித்த ஆய்வு நூல்
அழகர்கோயிலின் அமைப்பு, புராணத்தகவல்கள், வரலாற்றுச் செய்திகளோடு அழகர் கோயிலை சுற்றியுள்ள சமூக மக்களுக்கும் அழகர்கோயிலுக்கும் உள்ள தொடர்பை பேராசியர் தொ.பரமசிவன் அவர்கள் எளிமையாக விளக்குகிறார்.
 மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் பதிப்பிக்கப்பட்ட இந்நூலில் முழுக்க முழுக்கப் புள்ளிவிபரங்கள் நிறைந்த ஆவண நூலாகும்.
இந்நூலில் அனைத்தும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 76 - 79 ஆகிய மூன்று ஆண்டுகளில் நிகழ்த்திய ஆய்வின் விளைவாக எழுதப்பட்டநூலானது நான்கு  பாகமாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. .


• முதல் பாகத்தில் அழகர் கோயிலின் அமைப்பு, தோற்றம், இலக்கியங்களில் இது பற்றிக் கூறப்பட்டிருப்பது, சமூகத்தொடர்பு, பல்வேறு சாதி சமயத்தாருடன் தொடர்பு, திருவிழாக்கள், மரபுக் கதைகள், செவிவழி வர்ணிப்புப் பாடல்கள், நாட்டுப்புறக்கூறுகள், பரம்பரைப் பணியாளர்கள், பதினெட்டாம்படிக் கருப்பசாமி, பழமுதிர்சோலை, வாலி வழிபாடு, கல்வெட்டுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன.

• இரண்டாம் பாகத்தில் அழகர் அகவல்,வண்ணம், வர்ணிப்பு, வலையன் கதை, பதினெட்டாம்படிக் கருப்பர் உற்பத்தி வர்ணிப்பு, பிறப்பு வளர்ப்பு வர்ணிப்பு, ராக்காயி வர்ணிப்பும் கருப்பசாமி சந்தனம் சாத்தும் வர்ணிப்பு இடம் பெறுகிறது.

• மூன்றாம் பகுதியில் வெள்ளியக்குன்றம் பட்டயம் 1, 2, தொழில் அட்டவணை, ஆட்டவிசேஷம் , கோடைத்திருநாள்  சித்திரைப் பெருவிழா, வெள்ளையத்தாத்தா வீட்டுப் பட்டய நகல் ஓலை இடம் பெற்றுள்ளன.

• நான்காம்பாகத்தில் வேடமிட்டு வழிபடும் அடியவர்கள், வினாப்பட்டியும் விடையளித்தோர் பட்டியலும், சித்திரைத் திருவிழாவுக்கு மாட்டுவண்டி கட்டி வந்த அடியவர்களின் ஊர்கள், வரைபடங்கள், துணைநூற்பட்டியல், புகைப்படங்கள் என முழுமையான ஆய்வு நூலாகத் திகழ்கிறது.

அழகர்கோயிலை சுற்றி உருவான நிலமானிய அமைப்பு, சாதிக்கட்டுமானம், திருவிழாக்களில் அடுக்கதிகாரம் வெளிப்படும் முறைகள் குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார். தமிழில் செவ்வியல்தன்மை கொண்ட முதல் வழிகாட்டி நூலாக ‘அழகர்கோயில்’ கருதப்படுகிறது என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.


இந்நூலின் முதற்பாகத்தின் பிற்சேர்க்கையாக அறுபடைவீடுகளும் பழமுதிர்சோலையும் என்கிற கட்டுரையில் (பக்கம்-258 பதிப்பு-1989) அவர் முன் வைக்கும் வாதங்கள் படிக்கப்படிக்க ஆச்சர்யமூட்டும் ஒன்றாகும்.

முருகன் அறுபடை வீடுகளுக்கு உரியவன் என்பது தமிழர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. பரங்குன்றம்,அலைவாய்(திருச்செந்தூர்),ஆவிநன்குடி(பழனி),ஏரகம்,குன்றுதோறாடல்,பழமுதிர்ச்சோலை ஆகிய ஊர்களை அறுபடை வீடுகள் என்பர். சங்க இலக்கியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையினையே இக்கருத்துக்கு முதற்சான்றாக காட்டுவர் என்று கட்டுரையின் தொடக்கம் உள்ளது.

”பலவுடன் வேறு பல்துகிலின் நுடங்கி அகில் சுமந்து….
இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழவோனே”
(நக்கீரர். திருமுருகாற்றுப்படை 296-317) என்ற வரிகளைக் கொண்டு பழமுதிர்ச்சோலை என்னும் தலம் மதுரைக்கு அருகிலுள்ள அழகர் கோயிலே என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. 14ம் நூற்றாண்டினரான கந்த புராண ஆசிரியர் பழமுதிர்ச்சோலை என்பது ஒரு முருகன் தலம் போலத் தம் நூற்பாயிரத்தில் (பாடல் 7-12) பாடுகிறார். 15ம் நூற்றாண்டினரான அருணகிரிநாதரும் இச்சோலைமலையே பழமுதிர்சோலை என்று கருதி  ‘ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
ஆறமர லந்தலம்பு துறைசேர…
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்துகந்த பெருமாளே…’
பாடியுள்ளார்.
படை வீடு என்ற சொல் போர் வீரர் படை தங்கியிருக்கும் இடத்தைக் குறிப்பதாகும். இதனைப் பாடி வீடு என்று குறிப்பிடுவதும் உண்டு. முருகன் அலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் சூரபதுமனைப் போரிட்டு அழித்தான். எனவே அது 'படை வீடு' எனப்படும் தகுதி பெற்றது. பரங்குன்றிலோ,ஆவிநன்குடியிலோ,திருவேரகத்திலோ முருகன் போர்க்கோலம் கொண்டதாகவோ எவ்வகையான புராணச் செய்திகளும் இல்லை. அப்படியானால் அவற்றைப் படை வீடு என்று அழைப்பது எப்படிப் பொருந்தும்? என படிக்கும் நம்மிடம் கேள்வி கேட்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவன்.


பரங்குன்றம்,அலைவாய்,ஆவிநன்குடி,ஏரகம் ஆகிய நான்கு மட்டுமே திருமுருகாற்றுப்படையில் நக்கீரன் குறிப்பிடும் முருகன் தலங்கள். இதில் "திருவேரகம்" பற்றிய குழப்பமும் உள்ளது.

குன்று தோறாடல் என்ற சொல்லுக்கு 'முருகன் மலைதோறும் ஆடல் கொண்டவன்' என்பது பொருளாகும். குன்று தோறாடல் எனுந் தலைப்பில் அமைந்த திருப்புகழ்ப் பாடல்கள் ஐந்தும்,
"பல குன்றிலும மர்ந்த பெருமாளே"
"பல மலையுடைய பெருமாளே"
"மலை யாவையும் மேவிய பெருமாளே"
"குன்று தோறாடல்மேவு பெருமாளே"
என்றே முடிகின்றன.
இதனைக் கொண்டு 'குன்றுதோறாடல்' என்னும் பெயரோடு ஒரு முருகன் தலம் இருந்ததாக வாதாட இயலாது என்று மா.இராசமாணிக்கனார் கருத்துக்களை மேற்கோளாகக் காட்டி பேராசிரியர் தொ.பரமசிவன் தனது கட்டுரையைத் தொடர்கிறார்.
பழமுதிர்சோலை ஆறாவது படைவீடுதானா?

திருமாலடியார் திருமாலிருஞ்சோலை என்கின்றனர். அவர்கள் சோலைமலை என வழங்குவதும் முருகாற்றுப்படை பழமுதிர்ச்சோலை வழங்குவதும் ஒத்திருப்பது பற்றி இவ்வாறு கோடற்கு இடமுண்டாகிறது. இதுவும் நன்கு ஆராயத்தக்கது.
பழமுதிர்சோலை எற ஒரு மலை முருகனுக்கு உரியது என்பதற்கோ சங்க நூல்களிலும் இடைக்காலக் கல்வெட்டுக்களிலும் சான்று இல்லை.
ஆற்றுப்படை என்னும் சொல்லே மக்கள் வழக்கில் 'ஆறுப்படை வீடு' எத் திரிந்தது.  எனவே தான் திருமுருகாற்றுப்படையில் வரும் குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை மலை என்னும் இரண்டு சொற்களையும் இரண்டு முருகன் திருப்பதிகளின் பெயர்கள் என்று தவறாகக் கருத இடமேற்ப்பட்டது. தமிழ் நாட்டில் முருகன் திருப்பதிகள் சங்க காலத்திலும் நிறைய இருந்தன. இனால் ஆறுபடை வீடு என்பது மக்களிடையே பிறந்த நம்பிக்கை தான். வரலாற்று உண்மையன்று. முருகாற்றுப்படையின் அடிகளுக்குத் தவறான பொருள் கண்டதால் இந்த நம்பிக்கை வளர்ந்தது என தனது கட்டுரையை முடிக்கிறார் பேரா.தொ.பரமசிவன்.
அது மட்டுமல்ல, அழகர் கோயிலின் கருவறை வட்ட வடிவமாக உள்ளதால் அக்கோயில் பௌத்தர்களின் வழிபாட்டுத்தலம் என்றும் தன் ஆய்வேட்டில் வாதங்களைப் பதிவு செய்துள்ளார்.
அது பற்றி அடுத்த பதிவு-Postல பார்ப்போம்

அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்