ஒரு சமயத்தார்க்குரிய கோயில் மற்றொரு சமயத்தாருடைய கோயிலாக மாறுவதோ மாற்றப்படுவதோ சமய இயக்கங்களின் வரலாற்றில் வியப்பான செய்தியாகாது. அவ்வாறு பௌத்த விகாரையினை திருமாலுக்கான வழிபாட்டுத் தலமாக இளம்வழுதியின் பரிபாடல் மற்றும் பூதத்தாழ்வாரின் பாசுரம் ஆகியன பாடப்பட்ட காலத்திற்கு முன்பே மாற்றியிருக்க வேண்டும் என்கிற நோக்கில்
அழகர் கோயில் எனும் ஆய்வு நூலில் அழகர்கோயிலின் தோற்றம் எனும் இரண்டாவது இயலில் ஒரு சர்ச்சைக்குரிய விவாதத்தை முன் வைக்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவன்.
பண்டைக் காலத்திலே மதுரையிலே சமணசமயமும்,பௌத்த சமயமும் சிறப்படைந்திருந்தது. மதுரையைச் சூழ்ந்துள்ள மலைகளிலும் பாறைகளிலும் செதுக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள், கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே அங்குச் சமணர் இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன.
மதுரையைச் சூழ்ந்திருந்த எட்டுச் சமண மலைகளில் இருந்த எண்ணாயிரம் சமணரும் கழுவேறி னார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது. ‘‘எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்’’ என்பது பெரியபுராண வாசகம்.
தக்கயாகப் பரணியிலும் எண்பெருங் குன்றங்கள் கூறப்படுகின்றன.
‘‘தேவப் பகைவர் நம்முடம்பு
வீங்கத் தூங்கும் வெங்கழுவிற்
சேதப்படும் எண்பெருங் குன்றத்
தெல்லா வசோகும் எரிகெனவே.’’ (218-ஆம் தாழிசை.)
‘‘பரங்குன் றொருவகம் பப்பாரம் பள்ளி
யருங்குன்றம் பேராந்தை யானை - இருங்குன்றம்
என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்
சென்றெட்டு மோபிறவித் தீங்கு.’’
இதில் கூறப்படும் எட்டு மலைகளில் பரங்குன்றம், யானைமலை, இருங்குன்றம் (அழகர்மலை அல்லது சோலைமலை) மதுரைக்கருகில் உள்ளன. மற்ற ஒருவகம் பப்பாரம் பள்ளி அருங்குன்றம் ஆந்தைமலை என்பவை எந்த மலைகள் என்று தெரியவில்லை.இவற்றுள் "இருங்குன்றம்" பற்றி நாம் தெரிந்து கொள்வோம். இதற்குச் சோலைமலை என்றும் பெயர் உண்டு. திருமாலிருஞ்சோலை என்றும் இதற்குப் பெயர் உண்டு. ‘‘ஓங்கிருங்குன்றம்’’, ‘‘சோலையொடு தொடர்மொழி மாலிருங் குன்றம்’’ என்று பரிபாடலில் இம்மலை கூறப்படுகிறது. இது இப்போது யானைமலையைப் போலவே வைணவத் திருப்பதியாக இருக்கிறது. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமணர்கள் இருந்தார்கள் என்பதை இங்குள்ள குகைகளும் பிராமி எழுத்துக்களும் சான்று கூறுகின்றன.
யானைமலையிலிருந்தும் நாகமலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டதுபோலவே இம்மலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டனர் எனத் தெரிகிறது.
இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம் இடபகிரி, வனசைலம், நரசிம்மாத்ரி, கேசவாத்ரி என்ற பல பெயர்களையும் கொண்டுள்ளது. மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள 'சோமசந்த விமானம்' வட்ட வடிவமானது.
கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி (அழகர்) சுந்தரராசப் பெருமாள் அல்லது சோலைமலைக்கரசர் எனப்படுகிறார்.
பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளையும் இக்கோயில் கொண்டுள்ளது. அழகர் கோயில் மலைக்குகைகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதுகொண்டு இங்குப் பண்டைக் காலத்தில் பௌத்தர்களும் ஜைனரும் வாழ்ந்திருக்க வேண்டும். இங்குள்ள பெரியாழ்வார் நந்தவனத்துக்கு எதிரிலுள்ள குளம் ஆராமத்துக்குளம் எனப்படுகிறது. ஆராமம் என்பது பௌத்த பிட்சுக்கள் வசிக்கும் இடம். (இதனைச் சங்காராமம் என்று வடமொழி நூல்களில் கூறுவர். மணிமேகலைக் காப்பியத்தில் ஆராமம், உவவனம், அறத்தோர் வனம், பூம்பொழில், தருமவதனம் எனப் பலப் பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.)
அன்றியும் இக்கோயிலின் பழைய ஸ்தல விருட்சம் போதி (அரச) மரம் எனப்படுகிறது. இக்குறிப்புகள் யாவும் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்ததென்பதை காட்டுகின்றது.
மேலும் இக்கோயிலின் கருவறை வட்ட வடிவமானதாகும். அதனுள்ளே வட்டவடிவில் ஒரு திருச்சுற்று(பிரகாரம்) உள்ளது. பௌத்த சைத்தியங்களைச் சுற்றி இவ்வாறு வட்ட வடிவ திருச்சுற்று உண்டு என்று தெரிகிறது. மேலும் இந்த சைத்தியங்களை ஒட்டிய துறவிகள் வாழும் விகாரைகளில் நந்தவனமும் குளமும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் பிழை செய்த ஆண் துறவிகள் பிராயச்சித்தமாக நந்தவனத்திற்கு நீரிறைக்கவும், பெண் துறவிகள் கோயில் முற்றத்திற்கு மண் சுமக்கவும் கூடும் என்று மயிலை சீனி வேங்கடசாமி எனும் தமிழறிஞர் பௌத்தமும் தமிழும் நூலில் பதிவு செய்துள்ள தகவல்களை தனது ஆய்வுக்குள் மேற்கோளாக பயன்படுத்துகிறார் தொ.பரமசிவன்.
பௌத்த கட்டடகலையின் அமைப்பினை கொண்டிருந்ததற்கான சான்றாக கோயிலில் சில இடங்களில் வட்டவடிவ தூண்கள் உள்ளன. ( உ.ம்-கர்ப்பகிருகம் அருகேயுள்ள நாலுகால் மண்டபம்,ஆண்டார் மண்டபம்,) மேலும் இரு வட்ட வடிவ தானியக்கிடங்கும் இருக்கிறது குறிப்பிடத்தக்கதாகும்.
சமணர் கோயில்களையும் பௌத்த கோயில்களையயும், வைணவர்கள் கைப்பற்றும் போது முதலில் நரசிம்ம மூர்த்தியை அமைப்பது வழக்கம். அழகர் கோயில் நரசிம்ம வழிபாட்டிற்கு முக்கியமானது எனத்தெரிகிறது. அழகர் கோயில் ஆழ்வார்களால் பாடப்பட்ட காலத்திலும் இங்கு வைதீக சமயத்தினர்க்கு புறச்சமயிகளான சமண,பௌத்தர்கள் வாழ்ந்திருந்ததனை அறியலாம் என்கிறார் பேரா.தொ.பரமசிவன்.
மயிலை சீனி.வேங்கடசாமி தரும் இரண்டு சான்றுகளுடன், நரசிம்ம வழிபாடு, பிரயோக சக்கரம், இலக்கிய தல புரிணக்குறிப்புகள், கருவறையின் பெயரும் அமைப்பும், தலை மழிக்கும் வழக்கம் ஆகிய செய்திகளும் எனப் பல சான்றுகளுடன் பேரா. தொ.பரமசிவன் வலியுறுத்துவது 'இக்கோயில் பௌத்தக் கோயிலாக இருந்தது' என்னும் கருத்து இவ்வியலில் நிலைநிறுத்தப்படுகிறது.
ஆய்வின் போக்கு இவ்வாறு இருக்க
இக்கோயில் தற்போது வைணவ சமயத்தினரின் 108 திருப்பதிகளிலே ஒன்றாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். வைணவ சமயத்தினரிடமிருந்து இக்கருத்தை பெரிய அளவில் யாரும் எதிர்க்கவில்லை. ஏன்? பழமுதிர்சோலை என்ற கௌமார சமயத்தவர் வாதத்திற்கும் பெரிய அளவில் எதிர்ப்புகள் காட்டவில்லை.
அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்
No comments:
Post a Comment