Saturday, September 22, 2018

இராமாயணச் சாவடி இடையர்கள் ( பகுதி -2)


புது நாட்டு இடையர்கள் மற்றும் எட்டு நாட்டுக் கள்ளர் பற்றிய கதைகளை அறிவதற்கு முன்பு
ஸ்ரீமான். மு.இராகவ அய்யங்கார் எழுதிய

 | 'வேளிர் வரலாறு'  |

பற்றி முதலில் சற்று தெரிந்து கொள்வோம்.

பழைய சங்கநூல்களிலே, வேளிர் என்ற ஒரு கூட்டத்தார், தமிழ்ப் பேரரசர்களாகிய சேர சோழ பாண்டியரை அடுத்துப் பல விடங்களினுங் கூறப்படுகின்றனர்; இதனை “பண்கெழு வேந்தரும் வேளிரும்” எனப் புறநானூற்றினும், “இருபெரு வேந்தரொடு வேளிர்” என மதுரைக்காஞ்சியினும், “வேந்தரும் வேளிரும்” எனப் பதிற்றுப்பத்திற் பலவிடங்களினும் வருதலால் அறியலாம். இதனால், மூவேந்தரையுமடுத்து முற்காலத்தே தமிழ்நாட்டில் மதிக்கப்பட்ட சிற்றரசருள், இவ்வேளிரே முற்பட்டவர் என்பது விளங்கும். அன்றியும் “தொன்முதிர் வேளிர்” (அகம் - 258; புறம் - 24) “நாற்பத்தொன்பது வழிமுறைவந்த வேளிர்” (புறம் - 201) “இருங் கோவேள் மருங்கு” (பட்டினப்பாலை) “எவ்விதொல்குடி” (புறம் - 202) என நூல்களிற் காணப்படுதலின், இன்னோர் பண்டைக்கால முதலே தமிழ்நாட்டில் விளங்கியிருந்தவர் என்பதும் தெளியப்படுகின்றது என்கிறார் மு.இராகவ அய்யங்கார்.
வேளிர் வரலாற்றைப்பற்றித் தமிழ்நாட்டில் வழங்கிவந்த பழைய செய்திகள் சிலவற்றை, உரைஆசிரியர் நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரவுரையில், அடியில் வருமாறு குறிப்பிடுகின்றார்:-

||"தேவரெல்லாங்கூடி 'யாம் சேரவிருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர்' என்று அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர்.....
துவராபதிப்போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி வேளிர் உள்ளிட்டாரையும், அருவாளரையுங் கொண்டுபோந்து காடுகெடுத்து நாடாக்கி.......... பொதியிலின்கணிருந்தனர்" ||- எனக்காண்க.

 இவ்வரலாற்றுள், "துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண்" எனத் துவராபதிக்கும் திருமாலுக்கும் சம்பந்தங் கூறப்படுதலால், அத்தொடர், துவாரகையைப் புதிதாக நிருமித்து ஆட்சிபுரிந்த கண்ணபிரானைப்
பற்றியதென்பது எளிதிற் புலப்படத்தக்கது. இனி, மேற்கூறப்பட்ட செய்திகளுள், 'அகத்தியமுனிவர் துவாரகை சென்று கண்ணபிரான் வழியினராகிய அரசரையும் வேளிரையும் தென்னாட்டிற் குடியேற்றினர்" என்பதே, நாம் இங்கு ஆராய்தற்குரியது. அகத்தியனார் தென்னாடுபுகுந்த வரலாற்றைப்பற்றிப் புராணங்களிற் சொல்லப்பட்டிருப்பதை ஒத்தே மேற்கூறிய செய்திகள் பெரும்பாலும் அமைந்துள்ளனவாயினும், கண்ணன்வழிவந்தோர் பலரை அம்முனிவர் தம்முடன் கொணர்ந்தாரென்பது அப்புராணங்களிற் கூறப்பட்டிருப்பதாக இப்போது தெரியக்கூடவில்லை. எனினும், இச்செய்தியே, "வேந்துவினையியற்கை" என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் அவதாரிகையிலும்-"இது, மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கின்றது" (பொருளதி - 32) என  மற்றும் ஒருமுறை எடுத்தோதி வற்புறுத்தப்பட்டுளது.
[வேளிர் வரலாறு     ]

  " யது என்பான், பாண்டவரின் மூதாதைகளில் ஒருவனாகிய யயாதிக்குத் தேவயானை வயிற்றில் உதித்த புத்திரன். இவன் வம்சம் பல்கிப் பலகிளைகளாகி அநேக பிரசித்திபெற்ற ராஜர்களைத் தந்தது. யதுவின் மூத்தகுமாரனாகிய ஸகஸ்ரஜித்தினாலே ஹேஹய வமிசமாயிற்று. அவ்வம்சத்திலே கார்த்த வீர்யார்ச்சுனன் என்ற பிரசித்தி பெற்ற அரசன் தோன்றினான். அவன் சந்ததியிலே தாளஜங்கர்கள் தோன்றி விளங்கினர். யதுவின் இரண்டாம் புத்திரனாகிய குரோஷ்டுஷ வம்சத்திலே பிரசித்தி பெற்றவர்கள்--சசிபிந்து, சியாமகன், விதர்ப்பன் என்பவர்கள். இவருள் விதர்ப்பனால் விதர்ப்ப ராஜவம்சம் வந்தது. விதர்ப்பன் மூன்றாம் புத்திரனாலே சேதி வமிசம் வந்தது. இரண்டாம் புத்திரன் வமிசத்தவனாகிய சாத்வதனால் போஜ வமிசமும், அந்தக வமிசமும், விருஷ்ணிக வமிசமும் வந்தன. இவற்றுள், விருஷ்ணிக வமிசத்திலே தான்  கண்ணபிரான் அவதரித்தது.(அபிதானகோசம், யது என்ற தலைப்பின்கீழ்க் காண்க.)

யது வமிசத்தோர் ஆதியிற் கங்கை பாயுந் தேசங்களிற் பல்கிப் பெருகியகாலத்தே, அன்னோர் பகைவர்களால் துன்பமுறாது வாழ்தல்வேண்டி, அக்குலத் தலைவராகிய கண்ணபிரான், மேல்கடற்பக்கத்தே துவாரகையைப் புதிதாக நிருமித்து, அதனைச் சூழ்ந்து கிடந்த காட்டுப் பிரதேசங்களைத் திருத்தி நாடுகளாக்கி எண்ணிறந்த யாதவர்களை ஆங்குக் குடியேற்றித் தாம் அவர்கட்கு இரட்சகராக நின்று உதவி வந்தனர் - என்ற செய்தி புராண இதிகாசங்களிற் கேட்கப்படுகின்றது. கண்ணபிரான் தன்னடிச்சோதிக்கு(திருப்பரமபதம்) எழுந்தருளுங் காலத்தே, இவ் யாதவரிற் பலர் தமக்குள் விளைந்த பெருங் கலகத்தாற் போர்புரிந்து மாணடனரென்பதும், அக்காலத்துப் பலர் அவ்விடத்தை விட்டு வெளியேறினர் என்பதும், இதிகாசங்களால் அறியப்படுகின்றன.
இச் செய்திகளால், யாதவ குலத்தார்க்குப் பலதேசங்களிலும் அடுத்தடுத்துக் குடியேறும்படி நேர்ந்து வந்ததென்றும், அம்முறையில், , அவ்யாதவர்கள் தாம் பரவியிருந்த நாட்டுக்குந் தெற்கணிருந்த தமிழகத்துக் காடுகளைத் திருத்தி, குடியேறினர் என்று கொள்வதிற் புதுமையொன்றுமில்லை என்க.  என்கிறார் மு.இராகவ அய்யங்கார். (வேளிர் வரலாறு)

[ஸ்ரீரோமேச சந்த்ர தத்தர் எழுதிய "பழைய இந்திய நாகரீகம்" என்ற அரியநூலின் முதற்றொகுதியில் யாதவரைப்பற்றி எழுதப் பட்டிருப்பதாவது:-
"கண்ணனைத் தலைமையாகக்கொண்ட யாதவர்கள் (வட) மதுரையைவிட்டு நீங்கிக் கூர்ச்சரத்துள்ள(குஜராத்) துவாரகையிற் குடியேறினார்கள். அங்கே அவர்கள் அதிக காலம் தங்கவில்லை. அவர்கள் தங்கட்குள்ளே பெருங்கலகம் விளைக்க, (அவருள் பலர்) துவாரகையை நீங்கிக் கடல்வழியே பிரயாணித்தனர். அங்ஙனம் பிரயாணித்தவர்கள் தென்னிந்தியாவை அடைந்து ஆங்குப் புதுராஜ்யம் (*புது நாடு) ஸ்தாபித்ததாக நம்பப்படுகிறது" ]

தெற்கே பொதிகை மலையிலிருந்து புறப்படும் தாமிரபரணியால் வளம் கொழிக்கும் திருநெல்வேலியின் சுற்றுவட்டாரத்தில் கிருஷ்ணரின் உறவினர்களான துவாரகையெனும் புது நாட்டிற்கு குடிபெயர்ந்த
'புதுநாட்டு இடையர்கள்' பதிணென் குடி வேளிர் என்பதில் ஐயமில்லை. தருமத்துப்பட்டி செப்பேட்டிலும் "பதினெட்டு பட்டி கோங்கிமார்கள்" என்றே அடையாளம் காணப்படுகின்றனர். துவாரகை புது நாட்டு இடையர்கள்
திருநெல்வேலி பகுதிக்கு அப்போது வந்தேறிய போது வேணு வனமாக (மூங்கில் காடு) இருந்தது.
நெல்லையப்பர் கோயில் ஸ்தல புராணத்தில் வரும் இராமக்கோனார் புதுநாட்டு இடையரே ஆவார்.
அதன் ஸ்தலபுராணக்குறிப்பு:-
முன்பொரு காலத்தில் தென்காசி அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் இராமகோனார். அப்படி ஒருநாள் அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன இராமகோனார் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.
அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு திருநெல்வேலி கோயில் உருவானது. இந்த ஸ்தல புராணத்தின் படி  திருநெல்வேலி ஊர் இராமக்கோனார் மூலமாகவே உருவாகியது என்பது புலனாகிறது. காடு வெட்டி நாடு திருத்தி 'புது நாட்டை' இங்கும் உருவாக்கினார்கள். மதுரா-துவாரகா-பேளூர் துவாரசமுத்திரம்-பொதியில் என்ற புலம் பெயர் பயணமானது திருநெல்வேலியெனும் மற்றுமொரு புதுநாட்டில் நிலைபெற்றது.
சங்க காலப் பாண்டியமன்னர்களின் ஆளுமைக்கு வந்த இடையர்கள் தங்கள் பூர்வ பதிணென்குடி இதிகாச நாயகர்களான வாலியோன்(பலதேவன்),மாயோன்(கண்ணன்),நப்பின்னை ஆகியோரை வழிபடு தெய்வங்களாக கொண்டாடினர். அகத்தியரின் சீடரான தொல்காப்பியரும் 'மாயோன் மேய காடுறை உலகமும்' என்று முல்லை நில மக்களாக இவர்களை வரையறுத்தார்.
சங்கம் மருவிய காலத்தில் களப்பிரர்கள் ஆட்சியின் கீழ் புதுநாட்டு இடையர்கள் வந்தனர்.
களப்பிரர் ஆட்சியில் சமண,பௌத்த சமயங்கள் ஆதிக்கம் செலுத்தின. இதனால் முல்லைத்திணை மக்களுக்கு சமண,சமய தெய்வங்களான சாத்தான் அல்லது சாஸ்தா வழிபாடு நடைமுறைக்கு வந்தது. இருந்த போதிலும் சமண,பௌத்த சமயங்களும் கொண்டாடும் பலராம,வாசுதேவகிருஷ்ண வழிபாட்டிற்கு தடையேதும் ஏற்படவில்லை. கடுங்கோன் பாண்டியன் வருகைக்குப்பின் களப்பிரர் ஆட்சி முடிவுக்கு வந்தது. நாயன்மார்கள்,ஆழ்வார்கள் ஆகியோர்களின் பக்தி இலக்கியங்களால் சைவ,வைணவ சமயங்கள் வளர்ச்சியுற்றன. பாண்டிய பேரரசின் ஆட்சியின் கீழ் மிகச்செழிப்பமான பொற்காலமாக புதுநாட்டு இடையர்களுக்கு அமைந்தது.

கி.பி.1310 ல் தென்னாடு வந்த  மாலிக்கபூர்
மதுரை,திருச்சி,சிதம்பரம்,தஞ்சை, நெல்லை போன்ற தமிழக வளநாடுகள் முழுவதையும் சூறையாடினான். அக்காலகட்டத்தில் புதுநாட்டிடையர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
விஜயநகரத்து குமாரகம்பணர் காலத்தில் மதுரையில் நாயக்கர் ஆட்சி தொடங்கியது. எனினும் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்திலேயே மதுரையில் நாயக்கர் ஆட்சி வலிமை பெற்றது. விசுவநாத நாயக்கர் கி.பி. 1529 இல் மதுரை நாயக்க ஆட்சியை ஏற்றார். அது முதற்கொண்டு நாயக்கராட்சி மதுரையில் வளம் பெற்றது. 
விஸ்வநாத நாயக்கருக்குப் பின் (கி.பி.1529 - 1564 )ஆண்ட மதுரை நாயக்க மன்னர்கள்

• முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 - 1572 )
• வீரப்ப நாயக்கர் (1572 - 1595)
• இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)
• முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (இரண்டாம்கிருஷ்ணப்ப நாயக்கரின் சகோதரர் விசுவப்ப நாயக்கரின் மகன்)
(1601 - 1609)
• முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன்)
(1609 - 1623) ஆவார்.

விஜயநகர ஹிந்து சாம்ராஜ்யம் தென்னாட்டில் ஆதிக்கம் பெற்ற பிறகு புதுநாட்டிடையர்கள் மீண்டும் வளம் பெற்றனர்.
விஜயநகர ஆட்சியில் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியின் கீழ்  திருநெல்வேலி பகுதி வந்தது. நாயக்க மன்னர்கள் 72 பாளையங்களைக் கொண்டு நெல்லை மாவட்டத்து சைவ,வைணவ ஆலயங்களை சிற்பக்கூடங்களாக மாற்றிக்கொண்டிருந்தனர்.
முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1609 - 1623) ஆட்சிக் காலத்தில் மதுரை, தஞ்சை நாயக்கர்களிடையே போர் மூண்டதால் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார்.
இதனால் மதுரை நகரம் பொலிவிழந்தது.
கி.பி.1623ல் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரின் இளைய மகனாக திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு (திருமலைநாயக்கர்)  முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் மதுரை நாயக்கர்கள் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.

திருமலை நாயக்கர் ஆட்சியில் 1624ல் திருச்சியிலிருந்து மீண்டும் மதுரையைத் தலைநகராக மாற்றினார்.
திருமலை நாயக்க மன்னர் பொலிவிழந்த மதுரையை சீரமைத்துக் கொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி பாளையக்காரன் ஒருவன் புதுநாட்டு இடையர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். அது பற்றிய கதையை அடுத்த பதிவு- Post ல பார்ப்போம்.

அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்


2 comments:

  1. வேளிர் என்பவர் யாதவகுலத்தவரே என்பதைக் குறிக்கவல்ல வேறுபல சான்றுகளும் காணப்படுகின்றன. ஏறக்குறைய, தொள்ளாயிரம் வருஷங்களுக்கு முன் மைசூர் நாட்டை அடிப்படுத்தி, அந்நாட்டிலுள்ள துவாரசமுத்திரம் என்ற நகரத்திருந்து ஆட்சிபுரிந்தவர் ஹொய்சள-யாதவர் என்பதைப் பலர் தெரிந்திருக்கலாம். *இவ்வரசர், ஆதியிற் கூர்ச்சரநாட்டுத் துவாரகையினின்று குடியேறியவரென்பதும், யாதவ குலத்தவரென்பதும் சரித்திர பூர்வமாக அறியப்பட்டவை. இவ்வாறு வந்தேறிய யாதவத் தலைவர், கன்னட பாஷையில், பேலாலர் என வழங்கப்படுகின்றனர். தமிழர் வழங்கும் வேளாளர் என்ற சொல்லோடு இப்பேலாலபதம் பெரிதும் ஒற்றுமை பெறுதல் ஆராயத்தக்கது. அன்றியும், இப் பேலால-யாதவர் காலத்தே உண்டாகிய தலை நகரொன்று, வேளூர் அல்லது வேளாபுரம் என அவர்பெயரால் வழங்கப்பட்டுள்ளது.+ இதனால், கன்னடவடிவில் அவ்யாதவர் பேலாலர் என வழங்கப்பட்டிருப்பினும், அச் சொல்லின் உண்மையுருவம் வேளாளர் எனத்தெரிதலோடு, வேள் என்ற பெயரும் அவருக்கு முன்பு வழங்கிவந்த தென்பதும், அறியப்படும்.

    ReplyDelete
  2. * ஸ்ரீவியாஸபாரதம், ஸபாபர்வம், 14-ம் அத்யாயத்தில், ஜராஸந்தன் விஷயமாகக் கண்ணபிரான் யுதிஷ்டரருக்குக் கூறிவருமிடத்து -- "ராஜாவே! ஜராஸந்தன் எதிர்த்தலாற் கரைகடந்த பயம் எங்கட்கு நேர்ந்தபோது, நாங்கள் பதினெண் குலத்தோர்கள் சேர்ந்து இவ்வாலோசனை செய்தோம்" என்று, இரு முறை குறிப்பிடுதலால், யாதவர் பதினெண்வகைக் குடியினராயிருந்தமை தெளிவாகின்றது. (ஸ்ரீ ம.வீ. இராமனுஜாசாரியரவர்கள் பதிப்பித்துவரும் வியாஸபாரதம் தமிழ்பொழிபெயர்ப்புப் பார்க்க.) ஸ்ரீமத் பாகவதத்தில், இவர்கள் ஐந்து குலமாகவும், 101-கிளைகளாகவும் கூறப்படுவர். (தசமஸ்கந்தம்; அத்-1, 10)
    † முன்குறித்த வாக்யத்தில், 'அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்' என வேறுவேறாகக் குறிக்கப்பட்டிருப்பினும், இவ் வாக்யத்தில் 'நரபதிய ருடன்கொணர்ந்த 18-குடிவேளிர்' என வருவதனால், அந்நரபதிகள் வேளிருடைய தலைவர்களே என்பது பெறப்படுகின்றது. வேளிர் பதினென்வகையினரானமைக்கேற்ப, அவரரசரும் பதினெண்மராயினர் போலும்.

    ReplyDelete