Tuesday, September 25, 2018

இராமாயணச் சாவடி இடையர்கள் ( பகுதி -3)


ஸ்ரீராஜராஜேஸ்வரி உபாசகரான
 திருமலைமன்னர் கடம்ப வனமாகிய மதுரையை ஸ்ரீசக்கரவடிவில் அமைத்து புதுப்பொலிவூட்டிக் கொண்டிருக்கும் காலத்தில் திருநெல்வேலி வட்டாரமானது பாளையக்காரர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த 'புதுநாட்டு இடையர்கள்' ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கையினர்களாக வாழ்ந்து வந்தனர். 'சிறுதாலி' கட்டும் இப்பிரிவினருள் ஒரு பெண்ணானவள் தன் கணவனை இழந்து விதவையாகி விட்டால் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கமில்லை. இந்நிலையில் அங்குள்ள பாளையக்காரர் இடையர்களை அழைத்துக் கணவனை இழந்த பெண்கள் வாழ்நாள் முழுவதும் விதவையாய் இருப்பது நல்லதில்லை. அவர்கள் மற்றவர்களைப் போல. மறுமணம் செய்து கொள்ளலாம் என்று வற்புறுத்துகிறார்.
'நாங்கள் அறுத்தால் கட்டமாட்டோம்' என்று சொல்லிப் பாளையக்காரர் அறிவுரையினை சிறுதாலி கட்டும் புதுநாட்டு இடையர்கள் ஏற்க மறுத்தனர்.


அங்கு வாழ்ந்த புதுநாட்டு இடையர்கள் பாளையக்காரர்களுக்குச் சொந்தமான நிலங்களில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தனர். அவ்வாண்டு வழக்கம் போல இடையர்கள் நெற்பயிர்களை அறுவடை செய்தனர். அறுவடை முடிந்ததும் இடையர்கள் நெற்பயிர்களைக் கட்டத்தொடங்கினர். அப்பொழுது பாளையக்காரர் 'அறுத்த பயிர்களை இடையர்கள் கட்டக்கூடாது' என்று ஆணை பிறப்பித்து விட்டார். காரணம் கேட்ட இடையர்க்கு "நீங்கள் தான் அறுத்தால் கட்டமாட்டோம் என்று சொன்னீர்களே! அதன்படியே நீங்கள் இப்பொழுது நெற்பயிர்களைக் கட்டவேண்டாம்" என்று பாளையக்காரர் விளக்கம் கூறினார். இடையர்கள் நெற்கதிர்களை அப்படியே போட்டு விட்டுத் திரும்பி விட்டனர். அவர்களுக்குக் குலவழக்கமே பெரியதாகத் தோன்றியது. பாளையத்தை லிட்டுச் செல்ல முனைந்தனர். அதன்படி பதினெட்டு பட்டிகளில் உள்ள இடையர்கள் எல்லோருக்கும் செய்திகள் அனுப்பப் பட்டன. எல்லா இடையர்களும் ஓரிடத்தில் கூடி முடிவெடுத்தனர். அம்முடிவின்படி ஒருநாள் இரவோடு இரவாகத் தாங்கள் காலங்காலமாக வணங்கி வந்த குலதெய்வங்களை பிடிமண்ணாகவும், கால்நடைகளையும் ஓட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக வடக்கே தமிழ் வளர்த்த மதுரையை நோக்கி வந்தனர். மதுரை திருமங்கலம் அருகே ஊராண்ட உரப்பனூர் எட்டு நாட்டுக் கள்ளர் தலைவர் திருமலை பின்னத்தேவர்  தெற்கேயிருந்து புலம் பெயர்ந்து வந்த இந்த இடைக்கூட்டத்தினரிடம் நடந்த கதையைக்  கேட்டறிந்து திருமலை மன்னரிடம் அழைத்துச்சென்றார். திருமலை மன்னரும் அந்த புதுநாட்டு இடையர்களுக்கு மதுரை நகரின் வடக்குப்பகுதியில் குடியேற இடமளித்தார்.
மேற்குறித்த இடையர்கள்  புலம்பெயர்ந்த கதையை ஆங்கிலேயரான(Edgar Thurston)
எட்கர் தர்ஸ்டன் உருவாக்கிய (The Caste and Tribes at Southern India) 'தென்னிந்திய குலங்களும் குடிகளும்'  எனும் நூலில் காணப்படும் குறிப்பு அதை  உறுதி செய்கிறது.

  கி.பி.1906ம் வெளியிடப்பட்ட ஆங்கில நூலான மதுரை ஜில்லா கெஜட்டியர் ( Madura district gazeteer) எனும் நூலில் வில்லியம் பிரான்சிஸ் 96ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதையே எட்கர் தர்ஸ்டனும் வழிமொழிகிறார். [ The podunattu Idaiyans have a tradition that they originally belonged to Tinnevelly, but fled to this district secretly one night in a body in the time of Tirumalai Nayakkan because the local cheif oppressed them. Tirumala welcomed them and put them under the care of the kallan headman pinnai devan already mentioned, decreeing that, to ensure that this gentleman and his successors faithfully observed the charge, they should be always appointed by an Idaiyan. That condition is observed to this day. 

 *_Reference from :-
 Castes and Tribes of Southern India
Auther: Edgar Thurston
 Part: II.
Page:356 _*]

கி.பி.1981ம் ஆண்டில் மதுரை 'யாதவர் கல்லூரி' பேராசிரியர் திரு.கா.இராமானுசம் அவர்களின் 'மதுரை வட்ட யாதவர்களின் குலச்சடங்குகள்' எனும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நூலிலும் மேற்கண்ட புலம் பெயர்ந்த கதையே கூறப்படுகிறது. இதற்கான வாய்மொழித் தகவலாக  மதுரை வடக்கு மாசி வீதி திரு. வே.நா.திருமால் சோலைமணி,மற்றும் அச்சம்பட்டியில் குடியிருக்கும் திரு.மாடசாமிக்கோனார், ஊமச்சிகுளம் திரு.மாறநாட்டுக் கோனார் போன்ற புதுநாட்டு இடையர் சான்றோர்களிடம் வாய்வழித் தரவுகளை சேகரித்துள்ளார்.

[இதில் வே.நா. திருமால் சோலை மணிக்கோனார் தாத்தா அவர்களிடம் 02.08.2012ல்  எனது நீண்ட கால வைணவ நண்பரான திருக்கூடல். செ.ஜகந்நாத பராங்குச தாஸருடன் சென்று நேரடியாக பேட்டி கண்ட போது மேற்க் கண்ட புதுநாட்டு இடையர்கள் புலம் பெயர்ந்த கதையை உறுதி செய்தார். பரம்பரை பரம்பரையாக
காடிக்கஞ்சி எனும் புளிச்சதண்ணி தரும் வைத்திய பின்ணணியும், மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணனின் மலரடி தொழுதேத்தும் வைணவ பின்ணணியும் கொண்ட திருமால் சோலைமணி அவர்களின் இனிய நண்பர் வைணவச் சொற்பொழிவாளர், கலையிலங்கு மொழியாளர், மதுரைப்பேராசிரியர் முனைவர். இரா.அரங்கராஜன் ஸ்வாமிகளின் ஆன்மிக வாரிசே பராங்குச தாஸராகிய எனது நண்பர் ஆவார்.]

பி.முத்துத்தேவர் என்பவர் எழுதிய 'மூவேந்தர் குலத்தேவர் சமூக வரலாறு' எனும் நூலில் பக்கம் 215ல் மேற்குறித்த கதையே வழிமொழியப்படுகின்றன.
'திருநெல்வேலி வட்டாரத்தில் வாழ்ந்த புதுநாட்டு இடையர்களுக்கு அங்கிருந்த ஒரு பாளையக்காரன் தொந்தரவு சகிக்க முடியாமலிருந்தபடியால் அந்த புதுநாட்டு இடையர்கள் ஒன்று சேர்ந்து மதுரைக்கு வந்து திருமலை நாயக்க மன்னரிடம் தஞ்சம் புகுந்தார்கள். திருமலை நாயக்கரும் எட்டு நாட்டு கள்ளர் தலைவன் திருமலை பின்னதேவரை புதுநாட்டு இடையர்கள் காப்பாளனாக நியமித்து அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பரிபாலித்து வரும்படியாகச் செய்தார்' என்று பி.முத்துத்தேவர் மேற்கண்ட தகவலை உறுதி செய்கிறார்.

இம்மாதிரியாகத் தங்களைப் பரிபாலித்து வரும்படியாக மன்னனால் நியமிக்கப்பட்ட திருமலைப்பின்னத் தேவர் காலமாகிவிட்டால் அவர் ஸ்தானத்திற்கு வாரிசாக வரும் அடுத்த பட்டக்காரருக்கு முடி சூட்ட வேண்டிய பொறுப்பு இடையர்களுடையது.

மதுரையில் இராமாயணச்சாவடியிலிருந்து வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் வரையிலும் உள்ள இடத்தில் புது நாட்டு இடையர்களுக்கு வீட்டுவசதி செய்து கொடுக்கத் தேவர் வசம் ஒப்புவிக்கப்பட்டு அதன்படி வீடுகள் அமைக்கப்பட்டன. திருநெல்வேலி போன்றே மதுரைக்கு வடக்கிலும் வடமேற்கில் உள்ள 18 பட்டி ஊர்களில் இவர்கள் கன்று காலி ஆடுமாடு மேய்த்துக்குடி வாழ்வதற்கு திருமலை நாயக்க மன்னரால் ஏற்பாடு செய்யப்பட்டது. ( 'பதினெட்டு பட்டி கோங்கிமார்கள்' என்று தருமத்துப்பட்டி செப்பேடும் கூறுகிறது.)  

இராமாயணச்சாவடி புதுநாட்டு இடையர் ஜாதியில் இறந்தவரின் சொத்து அவரின் மனைவிகளுக்குப் போகாது. இறந்தவரின் தாயாதிகளான பங்காளிகளுக்கு மட்டுமே போய்ச் சேரும். இந்த பழக்கம்தான் காலம் காலமாக (வடமதுரா விலிருந்து) இந்த புதுநாட்டார் ஜாதியில் இருந்து வருகிறது .
 இவர்கள் இங்குள்ள இந்துமத கோட்பாடுகளை முழுமையாகப் பின்பற்ற மாட்டார்களாம். அதிலும் குறிப்பாக, இவர்களின் திருமணம், தத்துகுழந்தை எடுப்பது, பாகப் பிரிவினை, சொத்துவாரிசுஉரிமை (marriages, adoption, partition, inheritance etc.) இவைகளில் இந்த “இந்துமத” கோட்பாடுகளை ஏற்க மாட்டார்களாம். இவர்களுக்கென்றே ஒரு தனி பழக்க வழக்கம் உண்டாம்.

திருமணத்தில் ஒரு புதிய வித்தியாசமான பழக்க வழக்கம் உண்டாம். அது, ஒரு பெண்ணை, அவளின் தாய்வழி மாமனின் மகனுக்கு கண்டிப்பாக திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டுமாம். அவன் சின்ன பையனாக இருந்தாலும், வயதில் பெரிய ஆளாக இருந்தாலும், அந்தப் பெண், அவனைக் கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டுமாம். அப்படி திருமணம் செய்து கொள்ள மறுத்து வேறு யாரையாவது திருமணம் செய்தால், அந்த திருமணத்துக்கு வருபவர்களில் ஆண் என்றால் அவர் ரூ.12-8-0 (12 ரூபாய் எட்டாணாவும்), பெண் என்றால் அவர் ரூ.6-4-0ம் அபராதமாகக் கட்டிவிட்டு செல்ல வேண்டுமாம். அந்த மொத்த அபராதப் பணமும் இந்த ஜாதி சொத்தாக எடுத்துக் கொள்ளப்படுமாம்.
இந்த யாதவ ஜாதியில் தத்து எடுக்கும் பழக்கமே இல்லையாம். இதில் ஒரு வித்தியாசமான பழக்கம் இந்த ஜாதியில் உள்ளதாம். சொத்தை பாகம் செய்யும் போது “பத்தினி பாகம்” (Patni-bhagam) என்ற முறையில் ஒரு பழக்கம் உள்ளதாம். பொதுவாக, மற்ற ஜாதிகளில், பிறந்த ஆண் பிள்ளைகளை வைத்து பங்கு பிரிப்பார்களாம். அதை “புத்திரபாகம்” (Putra-bhagam) என்று சொல்வார்களாம். அதன்படி எத்தனை பிள்ளைகளை இருக்கிறார்களோ அத்தனை பேரும் தலைக்கு ஒரு பங்கு எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால், இந்த யாதவ ஜாதி பழக்கத்தில், “பத்தினி பாகம்” என்ற முறைப்படி சொத்துக்கள் பங்கு பிரிக்கப்படுமாம். அதன்படி, ஒருவருக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்களோ, அந்த மனைவிகளின் எண்ணிக்கைப்படி தலைக்கு ஒரு பங்கு எடுத்துக் கொள்வார்களாம். அந்த மனைவிக்கு எத்தனை மகன்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த சொத்தை பங்கு பிரித்துக் கொள்வார்களாம். இதுதான் அவர்களின் பழக்க வழக்கமாம். மகனை பெற்றுக் கொள்ளாத தாய் இருந்தால், அந்த தாய்க்கு 99 ஆடுகள் மட்டும் கொடுப்பார்களாம். ஆடு கொடுக்க முடியவில்லை என்றால் ஒரு ஆட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் பணமாகக் கொடுத்துவிட வேண்டுமாம். அந்த ஆடுகளையோ, பணத்தையோ அந்த தாய் தன் வாழ்நாள் ஜீவனமாக வைத்துக் கொள்ள வேண்டுமாம். சொத்தில் பங்கு கிடைக்காதாம்.

முழு ரத்த உறவுகளில், ஆண்வழி உறவுகள் பங்காளிகளாக கருதப்படுவர். பெண்வழி உறவுகள் பங்காளிகள் அல்ல. முழுரத்த ஆண்வழி உறவுகளில், முழு-ரத்த உறவு, பாதி-ரத்த உறவுக்கு முன்னரே முன்னுரிமை பெறுமாம்.

 “புதுநாட்டு இடையர் அல்லது இராமாயண சாவடி இடையர்” என்ற இந்த இடையர் ஜாதியில், விதவைகள் அவர்களின் கணவரின் சொத்தில் பங்கு கேட்க முடியாதாம். கணவர் இறந்தவுடன், அந்த விதவை மனைவியானவள், "வெள்ளைச்சீலை" அணிந்து கொண்டு கணவரின் வீட்டை விட்டுப் போய்விட வேண்டுமாம். அதற்கு கூலியாக, “அறுப்புக்கூலி” என்று ஒரு தொகையை வாங்கிக் கொள்ள வேண்டுமாம். அது 100 ஆடுகள் அல்லது ரூ.100 பணம்.இதைப் பெற்றுக் கொண்டால், கணவனின் சொத்தில் பங்கு கேட்க உரிமையில்லையாம். இறந்தவரின் சொத்தை அவரின் மகன்கள் எடுத்துக் கொள்வார்களாம். மகன் இல்லாவிட்டால், பங்காளிகள் என்னும் தாயாதிகள் (இறந்தவர் கூடப்பிறந்தவர்கள் அவர்களின் வாரிசுகள்) அந்தச் சொத்தை எடுத்துக் கொள்வார்களாம்.




 டாக்டர் எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston) அவர்கள் எழுதிய  "தென்இந்தியாவில்
ஜாதியும் பழங்குடிகளும் ”
( castes and Tribes of Southern India Volume II ) என்ற புத்தகத்தில் 'மதுரா (மதுரை) மாவட்ட கெஜட்டர்' (Madura district Gazateer by W.Francis)என்னும் நூலில் 96,97ம் பக்கங்களில் புதுநாட்டு இடையர் சமூக பழக்கவழக்கங்கள்,சட்டங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதில், விதவைகளுக்கு சொத்து கொடுக்காத ஜாதிகளைப் பற்றிய குறிப்பும் உள்ளது. அதில், புதுநாட்டார் என்னும் கூட்டத்தில் புதுவகையாக வாரிசுரிமை இருந்து வருகிறதாம். ஆண் பிள்ளையை பெற்றுக் கொள்ளாத தாய், அவளின் கணவனின் இறப்புக்குப்பின், கணவனின் சொத்தை அவனின் சகோதரனுக்கு கொடுத்துவிட வேண்டுமாம். அல்லது இறந்த கணவனின் தந்தைக்கு அல்லது சித்தப்பன், பெரியப்பனுக்கு கொடுத்துவிட வேண்டுமாம். ஆனால் அந்த விதவைக்கு உரிய ஜீவனாம்ச தொகையை, அந்த கூட்டத்தின் பஞ்சாயத்தில் முடிவு செய்வார்களாம்.
Among these podunattus an uncommon rule of inheritance is inforce. A women who has no male issue at the time of her husband's death has to return his property to his brother,father or maternal uncle. But is allotted maintenance, the amount of which is fixed by a caste panchayat. [*_Reference. From 'Madura district Gazeteer' by w.Francis - Page No. 97_]
ஆனால் தற்போது இந்த சட்டம் (uncommon rule) நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 பிற்காலங்களில் இந்த புதுநாட்டு இடையர்கள் 56 கிராமங்களில் பல்கிப்பெருகினர். மதுரையின் தற்போதைய  வடக்கு மாசி வீதி  பகுதி  திருமலைநாயக்கர் காலத்தில் 'இடையர் வீதி' என்றே அழைக்கப்பட்டதாக திரு.கா.இராமாநுசன் கூறுகிறார்.

வந்தேறிய இடையர்களுக்குத் திருமலை மன்னர் 'நான்கு மால்' இடம் ஒதுக்கிக் கொடுத்துள்ளான் என்று வடக்கு மாசி வீதி வன்னியக்கோனார் தந்த வாய்மொழிச் செய்தியினை கா.இராமாநுசம் பதிவு செய்துள்ளார். வடக்கு எல்லையைக் குறிக்கும் கல் வடக்குவாசல் செல்லத்தம்மன் கோயில் அருகேயும், தெற்கு எல்லையைக் குறிக்கும் கல் வடக்கு ஆவணி மூல வீதியிலும், கிழக்கு எல்லையைக் குறிக்கும் கல் ஆதிமூலம் பிள்ளை சந்திலும், மேற்கு எல்லைக்கான கல் கருவேப்பிலைக்கார சந்திலும் திருமலை மன்னரால் மதுரையில்

 |'இடையர் வீதி'|

க்கான நான்கு மால் எல்லையாக அறிவிக்கப்பட்டதாம். இதில் மேற்கு எல்லையைக் குறிக்கும்  கருவேப்பிலைகாரத் தெருவிலிருந்த எல்லைக்கல் தற்போது காணப்பெறவில்லை. மற்ற மூன்று கற்களையும் எல்லை தெய்வங்களாகக் கருதி இன்றும் இப்பகுதி இடையர்கள் வழிபடுகின்றனர்.

வடக்காவணி மூல வீதியின் மேற்குப்பகுதியில் இருக்கும் கல்வெட்டொன்றின் கூற்றுப்படி தானப்பமுதலியார் தானமாக விட்டுக்கொடுத்த ஒரு தோப்பில் கிழக்கு எல்லையைக் குறிக்குமிடத்தில் 'இடையர் வீதிக்கு மேற்கே' என்று இருக்கிறது.

 பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட சொத்துப் பத்திரப் பதிவுகளில் இடையர் கீழைத்தெரு, இடையர் நடுத்தெரு, இடையர் மேலைத்தெரு என்று அடையாளப்படுத்திய பழக்கம்  இன்றும் இப்பகுதி இடையர்களின் பேச்சு வழக்கில் உள்ளதைக் காணலாம்
திருநெல்வேலியிலிருந்து  பிடிமண்ணாக கொண்டு வந்த தெய்வங்கள் இந்த மேலைத்தெருவிலிருந்து,கீழைத்தெரு வரையுள்ள பகுதிகளில் வைத்து வணங்கினர். மேலும் நெல்லை மாவட்டத்திற்கே உரித்தான வடக்குவாச்செல்லி (வடக்குவாசல் செல்லியம்மன்) இராமாயணச்சாவடி புதுநாட்டு இடையர்களால் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு வந்தேறிய மதுரையிலும் வடக்கு வாசல் பகுதியிலேயே வைத்து வணங்கப்பட்டது. அதுவே தற்போதைய வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோயிலாகும். மேலும் அங்குள்ள பேச்சியம்மன் புதுநாட்டு இடையர்களால் நெல்லை மாவட்டத்திலிருந்து பிடிமண்ணாக கொண்டு வரப்பட்டவள். அதனை 'பிள்ளை காக்கும் பேச்சி' என்று வழங்கப்பட்டதாம். இடையர்கள் தங்களது வாரிசான புதிதாக பிறந்த குழந்தையை இப்பேச்சி முன் கிடத்தி பிள்ளையை நோய் நொடியின்றி காக்குமாறு வேண்டுவராம். மேலும் புதுநாட்டிடையர்களுக்கான பட்டி மேய்க்கும் கிழக்கு எல்லையான வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் இவர்களது மற்றொரு பேச்சியம்மன் வழிபாட்டில் உள்ளாள். அவள்  'பட்டி காக்கும் பேச்சி' என்று அழைக்கப்பட்டாளாம்.  [இத்தகவல் என் ஆருயிர் தோழர் ஜகந்நாத பராங்குச தாஸரோடு தெய்வத்திரு. வே.நா.திருமால்சோலை மணி தாத்தா அவர்களை 02.08.2012ம் ஆண்டு களஆய்வு  நிமித்தமாக சந்தித்த போது கிடைத்தாகும்.] பிள்ளைகாக்கும் பேச்சி, வடக்கு வாசல் செல்லி மற்றும் நாச்சிமுத்து கருப்பணசாமி, பட்டி காக்கும் பேச்சி, வண்டியூர் மாரியம்மன்  ஆகிய தெய்வங்களுக்கு வருடந்தோறும் ஆடி மாதம் தெய்வக்கொடையாக கிடா வெட்டி பொங்கல் வைத்து விழா எடுக்கும் வழக்கம் உண்டு. அது 2007ம் ஆண்டிற்கு பிறகு நடைபெறவில்லை.




ஸ்வாமி இராமாநுசரின் ஆச்சார்யரான பெரியநம்பிகள் வழிவந்த ஒரு ஸ்வாமியால் ஆராதிக்கப்பட்ட ' கம்பத்தடி கிருஷ்ணன்' சிறு கோயில் மதுரை வடக்குப்பகுதியின் மேற்கு பாகத்தில் நாயக்கர் காலத்தில் இருந்தது. இடையர்களுக்கு முன் இப்பகுதியில் இருந்த கவரா நாயுடு சமூகத்தினர் அந்த கம்பத்தடி கிருஷ்ணனை வழிபட்டு வந்தனர். புதுநாட்டு இடையர்களுக்காக அந்த நாயுடு சமூகத்தினர்களை  திருமலை நாயக்கமமன்னர் இடமாற்றம் செய்து ஒரு புதுத்தெருவை உருவாக்கித் தந்தார் என்கிற தகவலும் திருமால்சோலை மணி அவர்கள் கூறியுள்ளார். அந்த தெருவே தற்போதைய 'நாயக்கர் புதுத்தெரு'  என்று வழங்கப்பெறுகிறது. கம்பத்தடி கிருஷ்ணரும் இடைச்சமூகத்தின் வழிபடு தெய்வமாக மாறியது.  கம்பத்தடி தற்போதைய நவநீதகிருஷ்ணன் கோவில் வடக்கு ராஜகோபுரவாசலுக்கு கிழக்கு திசை பாகத்தில் உள்ள யானையின் அருகே உள்ளது. கம்பத்தடி என்பது தீபஸ்தம்பம் ஆகும். இன்றும் பெரியநம்பி வழியினரான (திருப்புல்லாணி வகையறாவிற்கு பிறகு திருக்குறுங்குடி வகையறா) பட்டாச்சாரியரே நவநீதகிருஷ்ணராக மாறிய கம்பத்தடி கிருஷ்ணரை திருவாராதனம் செய்கின்றனர். கவரா நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் ஒருவரால்  ஸ்ரீஜயந்தி 15ம் நாள்  உத்ஸவம் நடத்தப்படுகிறது. திசைக்காவல் செய்யும்  'எட்டு நாட்டுக்கள்ளர் தலைவன்' திருமலை பின்னத்தேவர் வம்சாவழியினருக்கு
இங்கு இராப்பத்து வேடுபறி உத்ஸவத்தில் மாலை பரிவட்டம் தீர்த்த மரியாதைகள் தரப்படுகிறது.

சரி! இனி யாரந்த 'எட்டு நாட்டுக்கள்ளர் தலைவன்' பின்னத்தேவன் என ஆராயத் தொடங்குவோம். அதனை
அடுத்த பதிவு -Post ல பார்ப்போம்.

             அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்








2 comments:

  1. முல்லைத் திணையும், மக்கள் வாழ்வும்

    உலகின் இயற்கை அமைப்பை ஒட்டி நிலங்களைப் பண்டைத் தமிழர்கள்
    குறிஞ்சி,முல்லை,மருதம்,, ,நெய்தல்,பாலை
    என ஐந்தாகப் பாகுபாடு செய்தனர்.
    இதில் முல்லைத்திணைக்குரிய பெரும்பொழுதையும், சிறுபொழுதையும் வரையறுக்கும் தொல்காப்பியர், "காரும், மலையும் முல்லை" எனச் சுட்டுகிறார்.

    "கார் காலமாவது, மழைபொழியும் காலம். அது ஆவணித் திங்களும், புரட்டாசித் திங்களும். மாலையாவது இராப்பொழுதின் முற்கூறு" என்பது இளம்பூரணர் உரை.

    முல்லைக்குரிய உரிப்பொருளான "இருத்தலை" பற்றி, நச்சினார்க்கினியர்,
    "இனித் தலைவி பிரிவுணத்திய வழிப்பிரியார் என்றிருத்தல், பிறிந்துழிக்குறித்த பருவம் அன்றென்று தானே கூறுதல். பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவன ஆகியவை இருத்தல்" என்று விளக்குவார்.

    பொதுவாக, கருப்பொருள்களாகக் கருதப்படுபவை இவை என்று தொல்காப்பியர் விளக்குகிறாரேயன்றி ஐந்திணைகளுக்கும் உரியவை இவை என்று அவர் வகுக்கவில்லை. உரையாசிரியர்களே அங்ஙனம் வகுத்துள்ளனர்.

    மேலும், தொல்காப்பியர்,
    "ஆயர்வேட்டுவர் ஆடுஉத்திணைப்பெயர்
    ஆவயின் வரூஉம் கிழவரும்உளரே."
    என்று முல்லைத் திணைக்குரிய மக்களை மட்டும் விளக்குகிறார்.

    முல்லைத் திணைக்குரிய முதற்பொருள்:- பெரும்பொழுது - கார்காலம். சிறுபொழுது - மாலை.
    கருப்பொருள்:- திருமால் (நெடுமால்) முல்லைத்திணைக் கடவுள்.
    உரிப்பொருள்:- நிலத்தலைவர்கள்: குறும்பொறை நாடன், தோன்றல் என அழைக்கப்பட்டனர்; மற்றும் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் ஆகியோர்.
    பறவை:- கானக்கோழி, சிவல், விலங்கு: மான், முயல்
    ஊர்:- பாடி, சேரி, பள்ளி என்று அழைக்கப்பட்டன.
    பூக்கள்:- முல்லை, குல்லைப்பூ, தோன்றிப்பூ, பிடவம்பூ.
    மரங்கள்:- கொன்றை, காயா, குருந்தம் முதலியன.
    உணவு:- வரகு, சாமை,
    முதிரை பறை:- ஏறு கோட்பறை.
    யாழ்:- முல்லையாழ்.
    நீர்நிலை:- கான்யாறு.
    தொழில்:- நிரைமேய்த்தல், பயிர் விதைத்தல், களை கட்டல், அறுத்தல் முதலியன.

    மனித வரலாற்றின் ஆரம்ப கட்டங்களில் மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்த மனிதர்கள், மக்கள் தொகைக் பெருக்கத்தின் காரணமாக அடுத்துள்ள கானகப் பகுதியான முல்லை நிலத்திற்குச் சென்றனர். மனிதன், இதற்குள் நாய், எருமை, பசு, ஆடு போன்ற விலங்குகளைப் பழக்கி, வளர்க்கக் கற்றுக்கொண்டான்.

    மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியின் இரண்டாவது நிலையான "ஆயர் நிலை" இவ்வாறு எய்தப்பட்டது. முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் விரைந்து பெருகும். அதனால் முதன் முதலாகத் தனிநபர் சொத்துரிமை இங்குதான் ஏற்பட்டது. இனக்குழுக்கள் தனித்தனிக் குடும்ப முறை ஆகியவை உருவாயின. சமுதாயத்தின் இரண்டாவது வளர்ச்சி நிலை இது.

    காதல் மணம், மணச்சடங்குகள் இன்மை (புலிப்பல் தாலி, தாழையுடை தவிர) ஆகிய தன்மைகளைக் கொண்டதும், "களவு" என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பதுமான இயற்கை மணமுறை முல்லை நிலத்தில் சிறிது சிறிதாக மாறி, "கற்பு" மணம் ஏற்பட்டது.

    தனிநபர் சொத்துரிமை, கற்புமணம் ஆகியவை தந்தை வழிச் சமுதாயம் உருவாக வழிவகுத்தது. காரணம், ஏராளமான ஆடு, மாடுகளைத் தன் சொத்தாக உடைய தலைவன் தன் செல்வம் காரணமாக அதிகாரமும், ஆதிக்கமும் பெற்றான். கூட்டுக்குடும்பமுறை உருவானது. பெரிய குடும்பத்தின் தலைவன் நாளடைவில் "சிற்றரசன்" ஆனான். தமிழகத்தில் இவ்வாறு அரசன் உருவானான் என்பதைக் காட்டும் சொல், "கோன்" (கோன் - இடையன், அரசன்; இடைச்சி - ஆய்ச்சி, அரசி). ஆடு, மாடு மேய்க்க உதவும் "கோலே" பின்னாளில் அரசனின் "செங்கோல்" ஆயிற்று.

    அன்புடன்

    ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
    E.P.I. இராம சுப்பிரமணியன்

    ReplyDelete
  2. மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு-முத்துத்தேவர்,1976,கருமாத்தூர், மதுரை: மதுரை 1000 வீட்டிடையர்களின் காப்பாளன் திருமலை பின்னத்தேவன்
    http://muvendarkulathevarsamugavaralaru.blogspot.com/2014/02/1000.html?m=1

    ReplyDelete